எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு.. தலைவர்கள் இரங்கல்..!

0 5515
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், மக்களவை எம்பி வசந்தகுமாரின் மறைவு வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வர்த்தகம் மற்றும் சமூக சேவைகளில் அவரது முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். வசந்தகுமாருடன் உரையாடிய போது தமிழகத்தின் வளர்ச்சி குறித்த அவரது ஆர்வத்தை தான் கண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட இரங்கல் செய்தியில், வசந்தகுமாரின் மறைவு தமிழக மக்களுக்கும் குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்த வசந்தகுமார் என்று புகழஞ்சி செலுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் அன்பைப் பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில் கொரோனா என்ற கொடியே நோய் நம்மிடம் இருந்து பறித்துச் சென்று விட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன்,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிப்பச்சமுத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வசந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட இரங்கல் செய்தியில், இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளர். அவர் குடும்பத்தாருக்கும்,அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments