காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்..!

0 18349
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், வசந்த் அன்கோ உரிமையாளருமான வசந்தகுமார், கடந்த 10ஆம் தேதி சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.

நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டதால் வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மாலையில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் உயிரிழந்தார்.

வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மையான மக்கள் தலைவரை இழந்து விட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் காலமானது பற்றி அறிந்ததும் சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது வீட்டு முன்பு, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை அதிகாலை 5 மணியளவில் வசந்தகுமாரின் உடலை மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள இருக்கின்றனர். தியாகராயநகரிலுள்ள வசந்தகுமாரின் இல்லம் முன்பு 2 மணி நேரம் வைக்கப்படும் உடல், பின்னர் சத்தியமூர்த்தி பவன் முகப்பில் பொதுமக்களின் பார்வைக்காக ஒரு மணி நேரம் வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments