‘வடிவேலு கொண்டையை மறந்ததைப் போலச் சட்டையை மறந்த திருடன்’ - சொந்த விட்டிலேயே நகைகளைத் திருடி சிக்கிய பரிதாபம்!

0 31273
அணிந்திருந்த சட்டையால் சிக்கிய தமிழ்ச்செல்வன்

போக்கிரி திரைப்படத்தில், வடிவேலு பல்வேறு விதங்களில் மாறுவேடமிட்டு முடிவில் கொண்டையை மறந்துவிட்டு சிக்கிக்கொள்வார். அதைப் போலவே சொந்த வீட்டிலேயே, கள்ளச்சாவி மூலம் திருட பக்காவாகத் திட்டமிட்டும், போட்டிருந்த சட்டையை மறந்ததால் சிசிடிவி காட்சி மூலம் போலிசாரிடம் திருடன் சிக்கியுள்ள சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி, அரியாங்குப்பம் மாதா கோயில் வீதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் - சுபாஷினி தம்பதி. இவர்களின் மகன் தமிழ்ச்செல்வன் எலெக்ட்ரீசியனாகப் பணிபுரிகிறார். அதே பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்ச் செல்வன் தனது குடும்பத்துடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு முடிந்தது சுபாஷினி மருமகள் மற்றும் குழந்தையுடன் வீட்டைப் பூட்டிவிட்டு ஜாதகம் பார்க்கச் சென்றுள்ளனர். தமிழ்ச் செல்வனும் வேலைக்குச் செல்வதாகச் சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டார்.

image

ஏற்கெனவே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தமிழ்ச்செல்வன் தனது பெற்றோர் நகைகளையே திருடி விற்க முடிவு செய்துள்ளார். அந்தத் திட்டத்தின்படி ஏற்கெனவே வீட்டின் கள்ளச் சாவியையும் செய்து வைத்திருந்தார். கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டுக்குப் பிறகு, வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த தமிழ்ச்செல்வன், தனது வீட்டுக்கு நடந்து வந்தார். பிறகு, தயார் செய்து வைத்திருந்த கள்ளச்சாவி மூலம் பூட்டைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் சென்றவர் ரூ. ஐந்து லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மஞ்சள் பையில் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். திருடிய நகைகளைச் சின்ன வீராம்பட்டினம் சுடுகாட்டில் புதைத்துள்ளார்.

image

ஜாதகம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய சுபாஷினி பீரோ திறக்கப்பட்டிருப்பதையும், நகைகள் அனைத்தும் திருடு போயிருப்பதைக் கண்டு காவல்துறையிர்  புகார் அளித்தார். தாயாருடன் சேர்ந்து தமிழ்ச் செல்வனும் காணாமல் போன நகைகளைத் தேடியுள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையின் அதே தெருவில் வேறொருவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகம் தெரியாத ஒருவர் கையில் மஞ்சள் பையுடன் சிவப்பு -கருப்பு வண்ண டி சர்ட் மட்டும் அணிந்து செல்வது தெரிந்தது. 

வீட்டின் பூட்டு உடைக்கப்படாமலே வீட்டில் உள்ள நகைகள் மட்டும் திருடு போயிருப்பதைக் கண்ட காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தமிழ் செல்வனின் மேல் சந்தேகம் ஏற்பட்டது. சுபாஷினி வீட்டுக்குச் சென்றபோது அங்கு தமிழ்ச்செல்வன் தனது டி - சர்ட்டை கழட்டிப் போட்டிருப்பதைப் போலிசார் பார்த்துள்ளனர். அத்துடன் இல்லாமல், சிசிடிவி காணொளியைக் காட்டி தமிழ்ச்செல்வனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தனக்குக் கடன் தொல்லை இருந்ததால் சொந்த வீட்டிலேயே நகைகளைத் திருடியதைத் தமிழ்ச்செல்வன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடத்திலிருந்து  தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்ட காவல்துறையினர் தமிழ்ச்செல்வனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சொந்த வீட்டிலேயே திருடிய தமிழ்ச்செல்வன் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments