சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்திற்கு உடலில் இருந்த கடுமையான காயங்கள் தான் காரணம் - சிபிஐ

0 143768
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்திற்கு உடலில் இருந்த கடுமையான காயங்கள் தான் காரணம் - சிபிஐ

சாத்தான்குளம் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், கடுமையான காயங்கள் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், தலைமை காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள தலைமை காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு  நீதிபதி பாரதிதாசன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகாரில் சாட்சியாக கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், கடுமையான காயங்கள் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரிடம் விசாரித்த நிலையில், தாங்கள் தற்போது வரை 35 பேரிடம் விசாரித்துள்ளதாகவும், விசாரணை இன்னமும் முடியவில்லை என்றும் சிபிஐ தெரிவித்தது.

ஜாமீன் கேட்கும் மூவரும் ஜெயராஜ்-பென்னிக்ஸின் மரணத்தில் தொடர்புடையவர்கள் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கக் கூடாது என ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தற்போது ஜாமீன் வழங்குவது இயலாது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுக்களை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments