திமுகவிற்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து

0 2254
திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீசை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், தமிழகத்தில் தங்கு தடையின்றி விற்பனையாவதை நிரூபிப்பதாக கூறி, திமுக எம்எல்ஏக்கள் கடந்த 2017-ம் ஆண்டு, பேரவைக்கு குட்கா பாக்கெட்டுகளை எடுத்து வந்து காட்டினர். இது சட்டப்பேரவை உரிமையை மீறிய செயல் என அதிமுக தரப்பில் புகார் எழுந்ததை அடுத்து, உரிமைக் குழு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்காக அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட பொருளை கொண்டு வந்து காட்டிய விவகாரத்தில் அனுப்பபட்ட நோட்டீஸ் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டதா என்பதை இந்த வழக்கில் முடிவு செய்ய முடியாது என்றனர்.

உரிமை மீறல் பிரச்சினையை முடிவு செய்வது சட்டப்பேரவை அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், 2017ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அடிப்படையில் மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை உரிமைமீறல் என்கின்ற அடிப்படை முகாந்திரம் இல்லை, தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமை மீறல் நோட்டீஸ் விதிகளுக்கு உட்பட்டது இல்லை, அடிப்படையில் தவறானது என்பதால், அந்த நோட்டீசின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உரிமை மீறல் நடைபெற்றிருக்கிறது என்று உரிமைக் குழு இன்னும் கருதினால், புதிதாக விசாரணை தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், அப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டால், உரிமைக்குழு முன் மனுதாரர்கள் ஆஜராகி, நீதிமன்றத்தில் வைத்த வாதங்களை முன்வைக்கலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றும் தீர்ப்பு என மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments