மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதாக பாகிஸ்தான் முதன் முறையாக ஒப்புதல்

0 4587
இந்தியாவால் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதை அந்நாடு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியாவால் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதை அந்நாடு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு, பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது.

பாகிஸ்தான், பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை தடுத்து நிறுத்தாவிடில் கருப்பு பட்டியலில் அந்நாடு வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி உள்பட பல்வேறு சர்வதேச நிதி அமைப்புகளில் இருந்து நிதி கிடைக்காது.

இதனால், 2019- ஆம் ஆண்டு இறுதிக்குள் பயங்கரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதியை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த காலக்கெடுவை FATF நீட்டித்துள்ளது.

இந்த நிலையில், நிதி கெடுபிடிகளை தவிர்க்கும் நோக்கத்தில் பாகிஸ்தான், 88 தீவிரவாத இயக்கங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் மசூத் அசார் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், இந்தியாவால் தேடப்படும் நபரும் 1993 -ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவருமான தாவூத் இப்ராகீம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகீம் கராச்சியில் வசித்து வருவதையும் பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதுநாள் வரை தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. தாவூதின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments