நம்பர் பிளேட்டில் தப்பான தமிழ்... போலீசில் சிக்கிய தம்பி..! திருச்சி போராளிக்கு அர்ச்சனை

0 25613
நம்பர் பிளேட்டில் தப்பான தமிழ்... போலீசில் சிக்கிய தம்பி..! திருச்சி போராளிக்கு அர்ச்சனை

திருச்சியில் தமிழ் மீதான பற்றுதலை காட்டுவதாக நினைத்து, இருசக்கர வாகன நம்பர் பிளேட்டில்  தமிழ் எண்களை பிழையாகக் குறிப்பிட்டிருந்த தம்பி ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டார். விபத்தை ஏற்படுத்தினால் அடையாளம் காண உதவும் வாகன எண்கள் தவிர்த்து தமிழை சரியாக வளர்ப்பது எப்படி என்று போலீஸ் புத்தி சொன்ன சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருச்சியில் போலீஸ் வாகன சோதனையில் சிக்கிய இரு சக்கரவாகனம் ஒன்றில் தமிழ் மொழி மீதான தனது பற்றை காட்டுவதாக நினைத்து கடலூர் தம்பி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தின் பின் பக்க நம்பர் பிளேட்டில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்துடன் தமிழ் எண்களும், முன்பக்க நம்பர் பிளேட்டில் வழக்கமான நடைமுறையில் உள்ள எண்களையும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதனை கவனித்த போலீசார் தமிழ் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்த பின்பக்க நம்பர் பிளேட்டில் TN 41 என்பதற்கு பதிலாக TN 40 என்று தவறாக தமிழ் எண் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதாவது பொள்ளாச்சி பதிவெண்ணுக்கு பதில் தவறாக மேட்டுபாளையம் பதிவெண் குறிப்பிடப்பட்டிருந்தது..!

இதையடுத்து வாகனம் ஓட்டி வந்த தம்பியிடம், வாகன நம்பர் பிளேட்டில் தப்பாக தமிழ் வளர்ப்பது தேவையற்றது என்று சுட்டிக்காட்டிய காவல் உதவி ஆய்வாளர், தற்போதைய நடை முறை என்ன என்பதை விளக்கும் விதமாக அந்த தம்பிக்கு செயல்முறை விளக்கம் ஒன்றையும் அளித்தார்...

பொதுமக்களில் ஒருவரை அழைத்து வந்து வழக்கமான நடைமுறையில் உள்ள நம்பர் பிளேட்டையும், தமிழ் எண்கள் குறிப்பிட்டிருந்த நம்பர் பிளேட்டையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்துக் காட்டச் சொன்னார்... அதில் தமிழ் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்த நம்பர் பிளேட்டை பார்த்து ச0ஆஎகஉஉரு... என்று கூறிய அந்த நபர் அதில் உள்ளவை என்ன என்பது தெரியாமல் தவித்தார்...

இதையடுத்து வாகனம் ஓட்டி வந்த தம்பியிடம் வெளியூரிலோ, வெளி மாநிலத்திலோ இந்த வாகனம் விபத்தில் சிக்கினாலோ அல்லது விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றாலோ, எப்படி சாதாரண மக்களால் அடையாளம் காட்ட இயலும்? என்று கேள்வி எழுப்பியதோடு, தமிழை வளர்க்க நிறைய வழி இருக்கின்றது. அதனை விடுத்து நம்பர் பிளேட்டில் தமிழை வளர்ப்பதாக நினைத்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அந்த தம்பிக்கு புத்திச்சொல்லி அனுப்பி வைத்தார்...

வாகன நம்பர் பிளேட் என்பது காவல்துறையினருக்கு பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்க உதவுகின்றது. வாகன ஓட்டி எதிர்பாராத விபத்தில் சிக்கி விபத்தில் இறந்தால் அவர் குறித்த விவரத்தை பெறவும், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பிச்செல்லும் நபர்களையோ, விபத்தை ஏற்படுத்திச்செல்லும் வாகனத்தையோ அடையாளம் காணவும், வாகனத்தின் பின்பக்க நம்பர் தெளிவாக புரியும் வகையில் இருப்பது மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர்.,

ஸ்டைல் என்ற பெயரில் நம்பர் பிளேட் எண்களில் பாம்பு விடுவதையும், தமிழ் எண்களை குறிப்பிட்டு பிறருக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதையும் தவிர்த்து சரியான எழுத்துக்களில் வாகன எண்களை குறிப்பிட வேண்டும் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments