விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலையை வைத்து வழிபட அனுமதிக்க முடியாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 2708
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலையை வைத்து வழிபட அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.  

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை நிறுவி வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்துஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமிருப்பினும், விநாயகர் சிலை வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுப்பாடுகளை தளர்த்தினால், கொரோனா நோய்த்தொற்று மீண்டும் தீவிரமாக பரவும் நிலை உருவாகிவிடும் என்பதால் அனுமதி வழங்கக்கூடாது" என வாதிட்டார்.

இதையடுத்து, கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத வழிபாட்டு பழக்கம் மற்றும் உணர்வுகள் தொடர்பான முடிவுகளை தற்போதைய நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டே எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆகவே, கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட இயலாது என்று தெரவித்த நீதிபதிகள், அரசின் முடிவு சரியானதே என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதே போன்று, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதால், ஏதேனும் தளர்வளிக்க வாய்ப்புள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சிலையை வைத்து வழிபட்ட பின் 5 அல்லது 6 பேருக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள், அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்றும் வினவினர்.

அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து விசாரண வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments