ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

0 4741
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக, கடந்த  2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி, தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை  மூடி சீல்வைத்தது. இந்த நடவடிக்கைக்கு  எதிராகவும், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும் தொடரப்பட்ட இந்த வழக்கை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.

2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன்  அமர்வு இன்று 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வழங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களையும்  தள்ளுபடி செய்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை மீண்டும் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்த தீர்ப்பை 2 வார காலம் நிறுத்தி வைக்க வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், தாங்கள் பிறப்பித்தது இறுதி உத்தரவு என்றும், வேண்டுமானால் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் என்றும் அறிவுறுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 1,500 போலீசார்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்கள் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும்,  நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு தலை வணங்குவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சரவையைக் கூட்டி, உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆலையின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், உடனடியாக “கேவியட்” மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments