கண்காணிக்கப்படுகின்றனவா.. கண்காணிப்பு கேமராக்கள்..?

0 2424

சென்னையில் மூன்றாவது கண் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. குற்றங்களைத் தடுத்து, குற்றவாளிகளை எளிதில் சிக்க வைக்கும் சிசிடிவி கேமராக்களை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த செய்தி தொகுப்பு...

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள், செல்போன் பறிப்பு, வழிபறி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருந்தன. அப்போது தொடங்கப்பட்ட திட்டம் தான் மூன்றாவது கண் திட்டம். அந்தந்த பகுதிகளில் வணிகர்கள், குடியிருப்போர் நலச் சங்கம் உதவியுடன் நகரெங்கும் சிசிடிவி -க்கள் அமைக்கப்பட்டு இன்று இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமரா உள்ள நகரமாக விளங்குகிறது சென்னை பெருநகரம். இன்று சென்னையில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் சிசிடிவி -க்கள், சிறுசிறு குற்றங்கள் மட்டுமல்லாது பெருங்குற்றங்களிலும் துப்புத் துலங்கவும் பேருதவியாக உள்ளது.

இத்தகைய சிசிடிவி கேமராக்கள் சில மாதங்களாக உரிய பராமரிப்பு இல்லாமல் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. ஆயிரம் விளக்கு காவல் நிலையம் அருகில் கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு சிசிடிவி கேமரா பல நாட்களாக தலைகீழாக தொங்குகிறது.

தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதியில் சேதமடைந்த கேமராவை சரி செய்யாமல் அப்படியே விட, அதில் காக்கை கூடு கட்டி அடைகாத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, அதன் அருகிலேயே இருக்கும் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையும் கண்காணிக்க ஆள் இல்லாமல் குப்பை நிறைந்து கிடக்கின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் தியாகராயர் நகரின் ரங்கநாதன் தெரு, வெங்கட் நாராயணா சாலையில் உள்ள கேமராக்களும் இதே நிலை தான். ஜி.என். செட்டி சாலை, வள்ளுவர் கோட்டம் போன்ற முக்கிய பகுதிகளிலும் சில மாதங்களாக சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்திருப்பது போல், பல இடங்களில் காண முடிகிறது.

தனியார் இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை தவிர, பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களை பராமரிப்பது அந்தந்த காவல் நிலையத்தினரின் பொறுப்பு. குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்கவும், மூன்றாவது கண்ணாக விளங்கும் சிசிடிவி கேமராக்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments