தொடர் சந்திப்புகள், அடுத்தடுத்த ஆலோசனைகளால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

0 3939
தொடர் சந்திப்புகள், அடுத்தடுத்த ஆலோசனைகளால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற  சர்ச்சை எழுந்த நிலையில், மூத்த அமைச்சர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியதோடு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் மாறி மாறி சந்தித்து நடத்திய தொடர் ஆலோசனைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என அண்மையில் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தை இது தொடங்கி வைத்தது.

சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அதிமுக எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது, முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகளை எழுப்பியது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை கட்சி மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தியது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.

உரிய நேரத்தில் உரிய முறையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார். இந்த ட்விட்டர் பதிவு, விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இந்நிலையில், 2021ல் முதலமைச்சராக ஓபிஎஸ் வர வேண்டும் என தேனி மாவட்டத்தில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதேசமயம், மக்களின் அன்பையும், ஆதரவையும் தான் பெற்றுள்ளதாக சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதும் ஊடகங்களில் கவனம் பெற்றது.

இந்த நிலையில் திடீரென அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், சிவி சண்முகம், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் அறைக்கு சென்று ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து 11.30 மணி அளவில், பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லம் சென்ற அமைச்சர்கள், அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

இதன் பிறகு அனைவரும் புறப்பட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லம் சென்று ஆலோசனை நடத்தினார்கள். அங்கு ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அதில் 5 அமைச்சர்கள் மட்டும் மீண்டும் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றனர்.

ஓபிஎஸ் வீட்டில் சுமார் அரை மணி நேரம் மீண்டும் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றனர். அடுத்தடுத்த சந்திப்புகள் ஆலோசனைகள் அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments