முதலமைச்சர் சுதந்திர தின உரை

0 1671

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்திக்கடவு - அவினாசி திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை முழு வீச்சில் நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.   

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் நமது நாட்டின் அடையாளங்களாகத் திகழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கொரோனா சூழலில் களப்பணியாற்றி வரும் அரசுத் துறை ஊழியர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதியே தண்ணீர் திறந்துவிட்டதையும், அதற்கு முன்னே கடைமடை வரை தூர்வாரியதால் வழக்கத்தைவிட 10 நாட்களுக்கு முன்னரே தண்ணீர் கடைமடை வந்தடைந்ததையும், இதனால் 4 லட்சத்து 11 ஏக்கரில் குறுவை நெல் பயிரிட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்ததைக் குறிப்பிட்டார்.
கடந்த நான்காண்டுகளில் ஆயிரத்து 433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறாயிரத்து 278 நீர்நிலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆறுகள், ஓடைகளில் தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்திக்கடவு - அவினாசி திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்துடன் பேச்சு நடத்திப் பரம்பிக்குளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களில் நிலவி வந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசியத் தர நிர்ணயக் கட்டமைப்பின் உயர்கல்வித் தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு பல்கலைக்கழகங்களில் தமிழகத்தின் 18 பல்கலைக்கழகங்களும், முதல் நூறு பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தின் 18 கல்லூரிகளும், முதல் நூறு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழகத்தின் 32 கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியமும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஊதியம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments