வசூல் போலீஸ் மிரட்டல் பப்ளிக்..! மின்கம்பத்தில் அதகளம்

0 8321

சென்னை வியாசர்பாடியில் லாரிகளை மறித்து கட்டாயமாக போக்குவரத்து போலீசார் பணம் பறிப்பதாக கூறி வெளி மாநில லாரி ஒன்றில் வழிகாட்டி வேலைப்பார்க்கும் தொழிலாளி மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 100 ரூபாய் கமிஷன் கேட்ட வசூல் போலீசை தெறிக்கவிட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் வந்த வடமாநில லாரி ஒன்றில் வழிகாட்டியாக இருந்த செங்குன்றம் தொழிலாளி ஒருவரை போக்குவரத்து போலீசார் தாக்கியதாக கூறப்படுகின்றது.

ஆத்திரம் அடைந்த தொழிலாளி, அருகில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் ஏறி கீழே குதிக்க போவதாக மிரட்டல் விடுத்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அங்கு இளைஞர்கள் அதிக அளவில் கூடியதால் விபரீதம் கருதி போக்குவரத்து போலீசார் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். பொதுமக்கள் திரண்டு அந்த தொழிலாளியை பத்திரமாக மீட்டனர்.

கீழே இறங்கிய அந்த தொழிலாளி கண்ணீர் மல்க தனது நிலையை விளக்கினார். போலீசார் சிக்னலுக்கு சிக்னல் நின்று கொண்டு லாரி ஓட்டுனரிடம் நூற்றுக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அபராதம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதாகவும், இதனால் லாரி ஓட்டுனர் தங்களுக்கு தரும் 300 ரூபாய் சம்பளத்தை குறைத்து தருவதாகவும், பேருந்து ஓடாததால் வேறு வேலை இல்லாத நிலையில் இந்த வேலையில் கிடைக்கின்ற சம்பளத்திலும் போலீசார் கைவைத்ததோடு ஒரு போலீஸ்காரர் கன்னத்திலும் கைவத்ததால் விரக்தி அடைந்ததாக அந்த தொழிலாளி கண்ணீர்மல்க தெரிவித்தார்.

போலீசிடம் சிக்காமல் விதியை மீறி நகருக்குள் லாரிகளை அழைத்து செல்வதுதான் இவர்களை போன்ற வழிகாட்டிகளின் வேலை என்றும், சம்பந்தப்பட்ட வெளிமாநில லாரி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக நகருக்குள் நுழைந்ததால், அதற்கு சட்டப்படி உரிய அபராதமாக மின்னனு எந்திரம் மூலம் 1000 ரூபாய் விதிக்கப்பட்டதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் போக்குவரத்து போலீசார் வழங்கிய ரசீதில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட மேலும் 2 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதியப்பட்டிருப்பது தெரியவந்தது. 

அதே நேரத்தில் வாகன ஓட்டிகளிடம் முறையான ரசீதுடன் உரிய அபராதம் மட்டும் வசூலிக்கப்பட்டால் இது போன்ற வீண் பிரச்சனைகளுக்கு இடமில்லை என்பதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் உணரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments