ஆட்டம் காணும் டிரம்பின் அஸ்திரம் - ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால் அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்!

0 16309
அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனா நோய்க்கு எதிராகத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் இருநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஹைட்ராக்சிகுளோரின் மருந்து பயன்படுத்தியதால் 293 பேர் இறந்துள்ளதாக மில்வாகீ செண்டினல் எனும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2019 - ம் ஆண்டில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால் 75 இறந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 218 பேர் இறந்துள்ளனர்.

image

மார்ச் மாதத்தில் கொரோனா நோய் அமெரிக்காவில் தீவிரமாகப் பரவத்தொடங்கியது. அதைக் கட்டுப்படுத்த வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பயன்படும் அனைத்து மருந்துகளையும் பரிசோதித்துப் பார்த்தன உலக நாடுகள். இந்தப் பரிசோதனையில் மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொரோனாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகிறது என்று மருத்துவர்கள் சிலர் பரிந்துரைத்தனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இதைத் திரும்பத் திரும்பக் கூறினார். ஆனால், மருத்துவ நிபுணர்கள்  ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இதய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எச்சரித்தனர். ஆனால், கடைசி வரை டொனால்ட் டிரம்ப் இதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருப்பதால் கொரோனா நோயையும் கட்டுப்படுத்த வேண்டும் அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் காக்கவேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்தார் டிரம்ப். அதனால், கொரோனா நோய்க்கு எதிராக ஹைட்ராக்சிகுள்ரோகுயின் மருந்தை முன்னிறுத்தினார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், இந்தியாவை மிரட்ட வேறு செய்தார். இந்தியாவும் நட்புறவுடன் அமெரிக்காவுக்கு  ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அனுப்பி வைத்தது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்படாத நிலையிலேயே, ‘ஒரு வாரத்துக்கும் அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின்  மாத்திரையைத் தினமும் ஒன்று என்று என்ற விகிதத்தில் சாப்பிட்டு வருகிறேன்’ என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவரது நடவடிக்கையைக் கடுமையாக ஆட்சேபித்தனர் மருத்துவ நிபுணர்கள்.

image

அமெரிக்க அதிபரே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிடுவதால் மக்களும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையின் பயன்பாடு 2000 மடங்கு அதிகமானது. இந்த மருந்தின் பக்கவிளைவுகளால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதில் பலரும் இதய பிரச்னைகள் ஏற்பட்டு  மரணத்தைத் தழுவினர்.

இந்த சூழலில் தான்  ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளால் இறந்தவர்கள் குறித்த தரவுகளை சேகரித்தது  மில்வாகீ செண்டினல் எனும் பத்திரிக்கை. அந்த ஆய்வில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் 293 பேர் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால், உண்மையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படியே நிலைமை சென்றால் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்கத் தேர்தலில் டிரம்புக்கு பின்னடைவே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments