நாமக்கல்லின் அடையாளம்... தடமே இல்லாமல் போன பரிதாபம்!

0 30951

நாமக்கல் நகரின் அடையாளமாக திகழ்ந்த 71 ஆண்டுகளாக வரலாறு கொண்ட பிரமாண்டமான ஜோதி திரையரங்கம் இடித்து தரைமட்டமாக்கப்படுவதால், சினிமா ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

கடந்த 1980- ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஒவ்வொரு நகரங்களுக்கும் திரையரங்கங்களும் அடையாளங்களாக திகழ்ந்தன . சென்னைக்கு உதயம் என்றால் மதுரைக்கு தங்கம் நெல்லைக்கு சென்ட்ரல் என்றால் நாமக்கல்லுக்கு ஜோதி என திரையரங்கங்கள் அடையாளமாக பார்க்கப்பட்ட காலக்கட்டம் அது. கால ஓட்டத்தில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் சிறிய நகரங்களில் உள்ள திரையரங்கங்கள் டூரிங் தியேட்டர்கள் காணாமலேயே போய் விட்டன.

நாமக்கல் நகரத்தின் மையப்பகுதியான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை வீதியில் கடந்த 1949 - ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஜோதி திரையரங்கம். இதனையடுத்து, 1985- ம் ஆண்டு இந்த திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு 1500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமாக மாற்றப்பட்டது. திரையரங்கத்தின் மாடியிலேயே கார் பார்க்கிங் வசதியும் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மாடியில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டிருந்த திரையரங்குகளில் இந்த திரையரங்கமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். சிவாஜி, கமல்,ரஜினி, விஜய் , அஜித் என மூன்று தலைமுறைகள் நடிகர்கள் நடித்த படங்கள் இங்கு திரையிடப்பட்டு வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன. தீபாவளி , பொங்கல் பண்டிகைகளின் போது, ஜோதி திரையரங்கத்தில் ஜே... ஜே.. என கூட்டம் நிரம்பி வழியும்.

ஒரு காலக் கட்டத்தில் தனி திரையரங்களுக்கு வரவேற்பு குறைந்து போக கடந்த 2005 - ஆம் ஆண்டு நவீனத்துக்கு மாற முடியாமல் ஜோதி திரையரங்கம் மூடப்பட்டது. அதன்பிறகு, பொழிவிழந்து வாழ்ந்து கெட்டுப் வீடு போல நாமக்கல் நகரில் ஜோதி திரையரங்கம் நின்று கொண்டிருந்தது. மூடப்பட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திரையரங்கத்தை உடைக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, ஜோதி திரையரங்கத்தை உடைக்கும் பணிகள் நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு தொடங்கப்பட்டது.இன்னும் இரண்டு நாள்களில் முற்றிலும் இடிக்கப்பட்டு விடும். 

ஒரு காலத்தில் அடையாளங்களாக திகழ்ந்த திரையரங்கங்கள் இப்போது இருந்த இடம் கூட தெரியாமல் போவதுதான் சோகத்திலும் சோகம்!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments