’தயாரானது கோவிட் 19 தடுப்பூசி... என் மகளும் செலுத்திக்கொண்டார்’ - ரஷ்ய அதிபர் புதின் உற்சாக அறிவிப்பு

0 13411
விளாடிமிர் புதின்

கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசியை யார் முதலில் தயாரிப்பது என்று உலக நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளது ரஷ்யா. கொரோனா நோய்க்கான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா முதல் முதலாகப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். புதிய தடுப்பூசியை புதினின் மகளும் போட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் உகானிலிருந்து பரவி உலகம் முழுவதையும் முடக்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 2 கோடி பேருக்கும் மேலே கொரோனா நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் ஏழு லட்சம் பேர் வரை இறந்துள்ளனர். கொரோனா பரவலால் உலக நாடுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் மிகப்பெரிய பொருளாதார பிரச்னையும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியா, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க தீவிர ஆராய்ச்சியில் இறங்கின. பல நாடுகள் தற்போது மனிதர்கள் மீதான இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. இந்த சூழலில் தான் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியது. மனிதர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையான எதிர்ப்பு சக்தி உருவாவதும் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, உலகின் முதல் கோவிட் 19 தடுப்பூசியைப் பதிவு செய்துள்ளது ரஷ்யா.

இது குறித்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின், “கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உலகில் முதல் முதலாகத் தயாரித்துப் பதிவு செய்துள்ளோம். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தடுப்பூசி உற்பத்தி அதிகளவில் தொடங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, கோவிட் 19 தடுப்பூசியை விளாடிமிர் புதின் மகளும் போட்டுக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் கொரோனா பிடியிலிருந்து உலகம் மீளும் என்று நம்பலாம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments