காதல் திருமணம் செய்துகொண்ட மூன்று சகோதரிகள்... அண்ணனும் தாயும் அடுத்தடுத்து தற்கொலை!

0 33456
தற்கொலை செய்துகொண்ட தாய் நீலாவதி, மகன் பால்ராஜ்
திருச்சி அருகே உடன்பிறந்த மூன்று சகோதரிகளும் காதல் திருமணம் செய்து கொண்டதால், மனமுடைந்த அண்ணன் இரண்டு நாட்களுக்கு முன்பு  தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், மகனின் இழப்பைத் தாங்கமுடியாமல் தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் - நீலாவதி தம்பதி. பன்னீர் செல்வத்துக்கு 60 வயதும், நீலாவதிக்கு 50 வயதும் ஆகிறது. அதே கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்கள். பன்னீர்செல்வம் - நீலாவதி தம்பதிக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பால்ராஜ் சென்னையில் எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வருகிறார்.
image
 
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்தவர் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். அங்கு, பாசமாக வளர்த்த இளைய தங்கையான மீனா முசிறியைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்து வந்தது தெரிய வந்தது. ஏற்கெனவே பால்ராஜின் அக்காவான மீராவும், தங்கையான  கல்பனாவும் காதலித்து, உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இளைய தங்கை மீனாவும் காதலிப்பதை பால்ராஜ் விரும்பவில்லை. அதனால், தங்கையின் காதலைக் கண்டித்துள்ளதோடு, இந்தக் காதல் வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். அண்ணனின் அறிவுரையை ஏற்க மறுத்த மீனா தனது அக்காக்களைப் போலவே உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்துகோண்டார். பாசமாக வளர்த்த தங்கை தன் சொல்லைக் கேட்காததால் மனமுடைந்த பால்ராஜ் நேற்று முந்தினம் அதிகாலை நேரத்தில் ஊருக்கு அருகே உள்ள பங்குனி வாய்க்கால் கரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 
 
பால்ராஜின் தற்கொலையால் மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்தது. இந்த வேளையில், ஏற்கெனவே மகள்களின் காதல் திருமணத்தால் மனமுடைந்து போயிருந்த நீலாவதி மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் குடியிருந்த வீட்டிலேயே கட்டியிருந்த சீலைத் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 
 
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு தற்கொலைகளும் திருவாசி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments