ஹாங்காங் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

0 1681

ஹாங்காங்கை சேர்ந்த பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு எதிராக  சதி செயல்களில் ஈடுபட்டதாக கூறி சீனாவின்  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங் போலீஸ் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளது. அதில், ஜிம்மி லாயும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது.

ஹாங்காங் நகரின் பிரபலமான டேப்லாய்டு பத்திரிகை ஆப்பிள் டெய்லியின் உரிமையாளரான ஜிம்மி லாய் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும்  சீனாவின் சர்வாதிகார ஆட்சியையும் தொடர்ந்து விமர்சித்தும் வந்தார். ஹாங்காங் மக்கள் நடத்தி வந்த தொடர் பேராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். தன்னை ஒரு  பிரச்னைக்குரிய நபர் என சீனா கருதுவதாகவும் சிறைக்கு செல்ல தான் தயராக இருப்பதாகவும் அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் ஜிம்மி லாய் இன்று காலை 7 மணியளவில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டதாக ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் முக்கிய அதிகாரியான சைமன்  ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது 71 வயதான ஜிம்மி லாய்  கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச பத்திரிகை உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழுவின் ஆசிய பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்டீப் பட்லர், ஜிம்மி லாயின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,'' ஜிம்மி லாயின் கைது, ஜனநாயகத்தை வலியுறுத்துபவர்களை நசுக்குவதற்கும் பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்கிற அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஜிம்மி லாய் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும் '' என்று கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments