அயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் கட்ட முடிவு

0 15077

அயோத்தியில் மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை , நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அழைப்போம் என்று அந்த அறக்கட்டளை கூறியுள்ளது.

அயோத்தியில் கடந்த ஆகஸ்ட் 5- ந் தேதி ராமஜென்மபூமி கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலம் உத்தரபிரதேச அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் மசூதியை கட்டும் பொறுப்பு இந்தோ இஸ்லாமிய கலசார அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ''ஒரு முதல்வராக எனக்கு எந்த மதத்துடனும் பிரச்னை இல்லை. ஆனால் ஒரு யோகி என்ற அடிப்படையில் நான் மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் ''என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மசூதி கட்டும் அறக்கட்டளையின் செயலாளர் அதார் ஹூசைன் கூறுகையில், ''இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம் ,ஆராய்ச்சி மையம் (இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரத்தை மையமாகக் கொண்டது) ஆகியவை கட்ட முடிவெடுத்துள்ளது. இதனால், மசூதிக்கு அடிக்கல் நாட்டும் விழாவாக கருத வேண்டாம்.  அந்த நிகழ்ச்சிக்கு  நாங்கள் கட்டாயம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அழைப்போம். ஏனென்றால் ,அவர் உத்தரபிரதேச மக்களின் முதல்வர் .மசூதியுடன் இணைந்து மக்கள் பயன்பாட்டுக்குரிய சில விஷயங்களையும் நாங்கள் செய்வதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்வார் என நம்புகிறேன் '' என்று தெரிவித்துள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments