தீவிரமடையும் பருவமழை.. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..!

0 1967

தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில், நேற்று மழை பாதிப்பு சற்றே குறைந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக மும்பை, தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாபூர், சதாரா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மும்பை, தானே, பால்கர், வடக்கு கொங்கன் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் அதிதீவிர கனமழையால், முக்கிய அணைகள், ஆறுகள் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், தொடர் மழையாலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் இன்று அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அம்மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இதேபோன்று, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 9 ம் தேதி வரையில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து, கர்நாடகாவின் கபினி அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. கர்நாடகாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

மழை நீடிப்பதால், கே. ஆர். எஸ் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. எனவே, கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குடகு மற்றும் வயநாட்டில் தொடர்ந்து மழை நீடித்தால், தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments