கழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தின் அடுத்த மூவ் என்ன?

0 13712

தி.மு.கவைச் சேர்ந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடத்தில் பேசிய அவர், இப்போதும் தி.மு.கவில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ வான தி.மு.க கட்சியைச் சேர்ந்த கு.க. செல்வம் டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். உடன், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகனும் இருந்தார். பாரதிய ஜனதா கட்சியில் இணையவே ஜே.பி. நட்டாவை சந்திக்க கு.க செல்வம் டெல்லி சென்றதாகச் சொல்லப்படுகிறது.

இதை மறுத்த கு.க செல்வம், தி.மு.க கட்சியில்தான் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கிடையே, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தி.மு.க தலைமை கு.க. செல்வத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து இன்று கு.க.செல்வம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவருக்கு பா.ஜ.க தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொண்டர்களிடத்தில் பேசிய கு.க. செல்வம், ”இன்னும் பாரதிய ஜனதா கட்சியில் இணையவில்லை. இனிதான் முக்கிய சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது” என்றார்.

பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அவருக்கு பா.ஜ.க கொடி நிறத்திலான துண்டை அணிவித்தனர். அந்த துண்டை ஏற்றுக் கொண்ட கு.க செல்வம் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்றார். விமான நிலையத்திலிருந்து  தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சென்ற அவருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கமலாலயத்தில்  ராமர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம்,'' திமுகவில் இருந்து என்னை நீக்கினாலும் கவலையில்லை பொதுமக்களுக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளேன். 40 ஆண்டுகள் திராவிட கட்சிகளில் இருந்து இருக்கிறேன் . சென்னை மேற்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என கேட்டேன் ஆனால் கட்சித் தலைமை பதவி கொடுக்க வில்லை.தி.மு. க. வில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது. திமுகவில் 55 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்சியில் இருக்க வேண்டாம்'' என்றார்.

கழுத்தில் பா.ஜ.க துண்டுடன் கமலாலயத்தில் வைத்தே செய்தியாளர்களை  கு.க. செல்வம் சந்தித்துள்ளதால், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments