தொடர் கனமழை.. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு..!

0 1464
தொடர்கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் வரத்து அதிகரித்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் அணை மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடி வரை நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் கனமழை பெய்ததால் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அந்த தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பவானி ஆற்று பாலத்தில் தயார் நிலையில் உள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆற்றங்கரையோர பகுதிகளான பெத்தி செட்டிபுரம், அணைமேடு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. உதகை பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் வாகனத்தின் மீது உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த கட்டடத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததால், நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர். 

அதே போல் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், திருப்பூர் மாவட்டத்தில் ஓடும் நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. 

தேனி மாவட்டம் போடியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால், கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் இருந்து வெள்ளம் வைகை அணை நோக்கி ஆர்ப்பரித்து செல்கிறது.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. தடுப்புச்சுவர் ஒன்றும் இடிந்து விழுந்துள்ளது. தேயிலை செடிகளுக்குள் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால், இன்று இரவு முதல் நாளை காலை வரை உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, மரங்கள் சாலையில் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறியுள்ளார். 

நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 8ந் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments