ஸ்ரீராமர் ஆலயத்திற்கு அடிக்கல்.. விழாக்கோலம் பூண்டது அயோத்தி..!

0 2579
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை முன்னிட்டு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை முன்னிட்டு நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 135 துறவிகள் உள்பட 175 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால்தால் மகராஜ், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய 5 பேர் மட்டுமே இருப்பார்கள்.

பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் ராமஜன்ம பூமிக்கு வருகிறார். அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக 40 கிலோ எடையிலான வெள்ளியிலான செங்கலை பிரதமர் எடுத்து வைக்க இருக்கிறார்.

பின்னர் பூமி பூஜை முடிந்ததும் அந்த வெள்ளி செங்கல் அங்கிருந்து எடுக்கப்பட்டு விடும். பூமி பூஜை நடைபெறும் இடத்தில் மழை நீர் புகாத வகையில் மிகப் பெரிய அளவில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. எல்சிடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பூமி பூஜைக்கான நிகழ்ச்சிகள் திங்களன்று தொடங்கிய நிலையில், பிற கடவுளர்களை வரவேற்கும் விதமாக, இன்று ராமார்ச்சனை பூஜை நடைபெற்றது.

சரயு நதியை ஒட்டியுள்ள பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கண்ணைக் கவரும் ரங்கோலி கோலங்களும் வரையப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தீப ஒளி ஜொலிக்க, அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. பூமி பூஜையில் பங்கேற்கும் துறவிகளுக்கு வழங்க சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சார்பில் வெள்ளி நாணயங்கள், ராமஜன்ம பூமி அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டுள்ளன. பூமி பூஜை முடிந்த பின்னர் உள்ளூர் மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சத்து 11 ஆயிரம் லட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு, அயோத்தி நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர், விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments