ராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக அயோத்தி விழாவில் பங்கேற்கவில்லை!

0 12149

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் இந்துக்கள் தரப்புக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி தேடி கொடுத்த தமிழகத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பராசரன் வயது மூப்பு காரணமாக ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவில்லை.

 ராமஜென்ம பூமி ஒப்படைக்கப்பட்ட ராம்லல்லா விரஜ்மான் அமைப்பின் வழக்கறிஞராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த பராசரன் . இவர், 92 வயது நிரம்பிய மூத்த வழக்கறிஞர். அயோத்தி கோயில் தொடர்பான தீர்ப்பு வெளியாவதற்கு முன், உச்சநீதிமன்றத்தில் தொடர்ச்சியாக 40 நாள்கள் அயோத்தி வழக்கு நடந்துவந்தது. இந்த 40 நாள்களும் தவறாது பராசரன் ஆஜராகி வாதிட்டார் . ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணியளவில் தொடங்கும் விவாதம், மாலை 4-5 மணி வரைகூட நீடிக்கும். இந்த வயதான காலத்திலும் அவரின் ஜூனியர்கள் உதவியுடன் பராசாரன் வாதிட்டு ராம்லல்லா விர்ஜ்மான் அமைப்புக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

ஸ்ரீரங்கத்தில், கடந்த 1927-ம் ஆண்டு பிறந்த பராசரன், பிரபல வழக்கறிஞர் கேசவன் ஐயங்காரின் மகன். 1983 முதல் 89-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி-யாக இருந்துள்ளார். 1976, 77-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார். தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிலும் பராசரன் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், பராசரன் , அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு அயோத்தி ராம ஜென்மபூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது, '' இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி , முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்கின்றனர். அயோத்தி வழக்கில் வெற்றி தேடி தந்த வழக்கறிஞர் பராசரன் சென்னையில் உள்ளார். இவர்கள் அனைவருமே 90 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த வயதில் கொரோனா காலத்தில் அவர்கள் இங்கு வருவது நல்லதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments