எட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..! காவல் நிலையத்தில் கெட்டிமேளம்

0 38837

8 வருடமாக காதலித்த பெண்ணை, தவிர்க்கும் நோக்கத்தில் 2 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞருக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. காவல்துறையினரால், ஏழை பெண்ணின் காதலுக்கு நீதி கிடைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை கே.கே.டி நகர் பகுதியை சேர்ந்த தேவி என்ற 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

விரைந்து சென்று விசாரித்த போது இதன் பின்னணியில் ஒரு காதல் ஏமாற்றக்கதை இருப்பது தெரியவந்தது. தேவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது விகாஸ் என்ற 20 வயது இளைஞரின் காதல் வலையில் சிக்கியுள்ளார். தேவி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்று விட்டாலும் கடந்த எட்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. ஆட்டோ ஓட்டி வந்த காதலன் விகாஸ் உடன் அவ்வபோது சந்தோஷமாக ஊர் சுற்றியதால் இரு முறை கர்ப்பமாகிய தேவி, விகாஸ் அளித்த போலியான திருமண வாக்குறுதியை நம்பி இருமுறையும் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் விகாஸுக்கும் அவரது மாமா பெண்ணுக்கும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டதால் தேவியை கழட்டிவிட முடிவு செய்த விகாஸ், தங்கள் வீட்டில் வரதட்சனையாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி தேவியுடன் பழகுவதை தவிர்த்துள்ளார்.

பணத்திற்காக விகாஸ், தனது 8 வருட காதலை தூக்கி எறிந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தூக்கமாத்திரை சாப்பிட்டதாக தேவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விகாஸை அழைத்து காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் விசாரித்த போது, அவன் தேவி மீது காதலாக இருப்பதும் அவனது குடும்பத்தினரின் நிர்பந்தத்தின் பேரிலேயே அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் தெரிவித்தான். மேலும் தனது குடும்பத்தை சமாதானம் செய்து இன்னோரு நாளில் தேவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி போலீசாரிடம் அவகாசம் வாங்கிச்செல்ல முயன்றான் விகாஸ்..!

இதையடுத்து காதலில் உறுதியாக இருப்பது உண்மையானால், இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமே..? என்று மடக்கிய காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் தனது செலவில் பூ மாலை மற்றும் மஞ்சள் தாலியை வாங்கிவரச்செய்தார். அவரது முன்னிலையில் காதலன் விகாஸ், காதலி தேவிக்கு மாலை மாற்றி மஞ்சள் தாலி கட்டினார். சிதைந்து போக இருந்த 8 வருட காதலை திருமணத்தில் சேர்த்து வைத்து நீதி தேடிக் கொடுத்துள்ளார் காவல் ஆய்வாளர் ஆபிராகம் குரூஸ்..!

காவல் நிலையத்தில் கெட்டிமேளச் சத்தம் இல்லாமல் சமூக இடைவெளியுடன் இனிதே நடந்து முடிந்தது இந்த காதல் திருமணம். காதல் தம்பதியரின் கையில் ஆளுக்கு 500 ரூபாய் பணத்தையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ்..!

ஒரு வேளை காதல் மாப்பிள்ளை விகாஸ், பணத்திற்கு ஆசைப்பட்டு, குடும்பத்தினர் பேச்சை கேட்டுக் கொண்டு, காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் கடுக்கா கொடுக்க நினைத்திருந்தால் அவர் மீது பாலியல் பலாத்காரம் , பெண்களுக்கு எதிரான வன்முறை தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சனை கொடுமை என எக்கச்சக்க வழக்குகள் பாய்ந்திருக்கும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்..!

அதற்காக காதலித்தவர் கைவிட்டு விட்டால் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது என்று எச்சரிக்கும் காவல்துறையினர் தற்கொலை கோழைத்தனம் மட்டுமல்ல மடமையும் கூட என்கின்றனர்.

அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் பாடங்களை மறந்து ஆசைவார்த்தைக்கு மயங்கி காதலில் விழுந்து திருமணத்திற்கு முன்பே எல்லாவகையிலும் எல்லை மீறிவிட்டு இறுதியில் எஸ்கேப் ஆக நினைக்கும் காதல் ஜோடிகளுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments