தீக்குளித்த பெயின்டர் பலி - இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

0 7559
சென்னை அடுத்த புழலில் வாடகைதாரர் - வீட்டு உரிமையாளர் பிரச்சனையில் தலையிட்ட காவல் ஆய்வாளர், வாடகைதாரரை குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கினார். இதனால் மனமுடைந்த வாடகைதாரர் தீக்குளித்து உயிரை விட்ட நிலையில், அத்துமீறிய ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த புழலில் வாடகைதாரர் - வீட்டு உரிமையாளர் பிரச்சனையில் தலையிட்ட காவல் ஆய்வாளர், வாடகைதாரரை குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கினார். இதனால் மனமுடைந்த வாடகைதாரர் தீக்குளித்து உயிரை விட்ட நிலையில், அத்துமீறிய ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த புழல் விநாயகபுரத்தை சேர்ந்த (அதிமுக பிரமுகரான) ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஓட்டேரியை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

ஊரடங்கால் வருமானம் இல்லாமல், சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். வீட்டை காலி செய்யுமாறு கூறியதையும், சீனிவாசன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜேந்திரனின் தூண்டுதலின் பேரில், சீனிவாசன் குடியிருந்த வீட்டிற்கு சென்ற புழல் காவல் நிலைய ஆய்வாளர் சாம் பென்ஷாம், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை அடித்து, காலையில் காவல் நிலையம் வருமாறு கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் நள்ளிரவில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.

சீனிவாசனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 85% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெயின்டர் சீனிவாசன் குடிபோதையில் தகராறு செய்ததாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஆய்வாளரே ஏன் நேரில் சென்றார் என உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தும் நிலையில், ஆய்வாளர் சாம் பென்ஷாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் இருப்பதால், வாடகை கேட்டு வற்புறுத்த கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட சீனிவாசன் தரப்பை விசாரிக்கமால், நேர்மாறாக நடந்த விசாரணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் அதிமுகவைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பெயின்டரைத் தாக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள புழல் காவல் நிலைய ஆய்வாளர் சாம் பென்ஷாம், கடந்த 2018ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் ஆய்வாளாராக பணியாற்றியுள்ளார்.

அப்போது காவல் நிலையத்திற்குள் பணி நேரத்தில் சீருடையுடன், பெண் ஒருவருடன் வீடியோ காலில் அந்தரங்கமாக பேசிய புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.. அதன் பிறகு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், புழல் காவல்நிலையத்திற்கு மாற்றலாகி வந்த நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய காவல் ஆய்வாளர் சாம் பென்ஷாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments