ரஃபேல் விமானத்தை முதலில் ஓட்டிய இந்திய விமானி ... காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரதார்!

0 18562

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வழங்கப்பட்ட 5 விமானங்கள் பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரிலுள்ள டசால்ட் விமானத் தளத்திலிருந்து குரூப் கேப்டன் ஹர்கிரத்சிங் தலைமையில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஹரியானாவிலுள்ள அம்பாலா( IAF’s No. 17 Squadron)விமானப்படைத் தளத்தில் இந்த விமானங்கள் இன்று மதியம்தரையிறங்குகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே, முறைப்படி ரஃபேல்  விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன. கடந்த 1997- ம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய் -30 ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மற்றோரு வெளிநாட்டு போர் விமானமாக ரஃபேல் இந்திய விமானப்படையில் இணைகிறது.image

இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்களை வாங்க முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏர்கமோடர் ஹிலால் அகமது ரதார் .தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பக்ஷியாபாத்தை சேர்ந்த ஹிலால், நர்கோட்டா சைனிக் பள்ளியில் படித்து பிறகு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றவர். கடந்த 1988- ம் ஆண்டு இந்திய விமானப்படையில் ஃப்ளைட் லெப்டினென்டாக சேர்ந்து 2019- ம் ஆண்டு ஏர்கமோடராக பதவி உயர்வு பெற்றார். ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பாளராக இவர் பிரான்ஸில் நியமிக்கப்பட்டிருந்தார் இவரின் முயற்சியால்தான்,   ரஃபேல் விமானங்கள் மிக விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சூழலுக்கு ஏற்றார் போல ரஃபேல் விமானங்களில் மாற்றம் செய்யவும் ஆயுதங்களை பொருத்துவதில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யவும் டசால்ட் நிறுவனத்துக்கு ஹிலால் உதவிக்கரமாக இருந்துள்ளார். போர்டியாக்ஸ் நகரில் இந்த விமானங்கள் வழியனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப்புடன் இணைந்து  இவரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்- 21, மிராஜ் 2000 மற்றும் கிரண் ரக விமானங்களை 3,000 மணி நேரம் ஓட்டிய அனுபவம் பெற்றவர் ஏர் கமோடர் ஹிலால் அகமது ரதார் . விங் கமாண்டராக இருந்த போது 2010- ம் ஆண்டு வாயு சேனா பதக்கமும் குரூப் கேப்டனாக இருந்த போது 2016- ம் ஆண்டு விஷிச்த் சேவா பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ரஃபேல் போர் விமானங்களை ஓட்டிய முதல் இந்திய பைலட் இவர்தான். அதற்கு பிறகே இந்திய சூழலுக்கு ஏற்றார் போல மாற்றங்கள் செய்ய டசால்ட் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments