'சொல்வதைக் கேட்காவிட்டால் சீட்டைக் கிழித்துவிடுவேன்’ - அடாவடி கணக்காளரை சிக்க வைத்த சத்துணவு அமைப்பாளர்கள்!

0 9681

சிதம்பரம், நகராட்சிக் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் சரவணகுமார் என்பவர் சத்துணவு பெண் அமைப்பாளர்களிடம் மாதந்தோறும் ரூ.1000 கப்பம் கேட்பதோடு மட்டுமல்லாமல், நான் சொல்லும் வேலைகளைச் செய்யாவிட்டால் வேலையைவிட்டே தூக்கி விடுவேன் என்று மிரட்டும் ஆடியோ தீயாகப் பரவிவருகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் கணக்காளராக சரவணகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார் . கடந்த இரண்டு வருடங்களாக சிதம்பரம் நகராட்சியின் கீழ் இயங்கிவரும் சத்துணவு மையங்களுக்கும் கூடுதலாகக் கணக்காளராகவும் பொறுப்பில் உள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளர்களிடம் மாதந்தோறும் ரூ. 1000 லஞ்சத்தைப் பெற்று வருவதோடு மட்டும் அல்லாமல், தனது சொந்த பணிகளையும் அவர்களிடம் ஒப்படைத்துச் செய்யச்சொல்லி மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அந்த  ஆடியோவில், சரவணகுமாரிடம் சத்துணவு அமைப்பாளர் ஒருவர், “சார் பணத்தை கொடுத்துவிட்டேன்” என்கிறார். பதிலுக்கு சரவணகுமாரோ, “போன்ல பணத்த பத்தி பேசுரது என்னம்மா பழக்கம்? போன்ல இதப்பத்திலாம் பேசக்கூடாது. எதுக்கு ரிக்கார்டு செஞ்சி வெளியிடவா?” என்று அதிகாரத்துடன் மிரட்டுகிறார்.

பதிலுக்கு அந்தப் பெண்ணோ, “சார்... நாங்க அப்படிலாமா சார் செய்வோம்” என்று பயத்துடனே பதில் அளிக்கிறார்.

மற்றோரு ஆடியோவில், வேறொரு சத்துணவு அமைப்பாளரிடம், “எனக்குத் தெரியாத அதிகாரிகள் யாரும் இல்லை. நான் நினைத்தால் என்ன வேண்டும்னாலும் செய்வேன். சொன்னதைக் கேட்காவிட்டால் உடனே  சீட்டைக்கிழித்து அனுப்பிவிடுவேன்” என்று அதிகாரத் தொனியில், உடான்ஸ் விட்டு தனது பணிகளைச் செய்யச்சொல்லி மிரட்டுகிறார்.

கணக்காளர் சரவணக்குமாரின் அடாவடியால் கலங்கிய சத்துணவு அமைப்பாளர்கள் இவர் பேசிய ஆடியோவை ரிக்கார்ட் செய்து வெளியிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம்  கொடுத்துள்ளனர். அதோடு, பணிப் பாதுகாப்பு கேட்டும் மனு அளித்துள்ளனர்.

சரவணகுமாரால் பாதிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர்களில் ஒருவரான லட்சுமிதேவி, ”இரண்டு ஆண்டுகளாகவே சரவணகுமார் மாதந்தோறும் ஆயிரம் பணம் கேட்டு மிரட்டுகிறார். இல்லையென்றால் எஸ் ஆர் புக்கில் கைவைத்து வேலைக்கு வேட்டுவைத்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். எங்கள் பிரச்னையை அனைவருக்கும் தெரியப்படுத்தவே அவர் பேசியதை ரிக்கார்டு  செய்து வெளியிட்டுள்ளோம்” என்றார்.

ஆடியோ குறித்து ணக்காளர் சரவணகுமாரிடம் விளக்கம் கேட்டபோது, “நகராட்சி ஆணையரிடம் பேசிவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்” என்று வழக்கம் போல நகராட்சி ஆணையரின் பெயரைக் கூறிவிட்டு பதில் அளிக்க மறுத்துவிட்டார்!  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments