ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை..!

0 3208
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வந்தடைகின்றன.

இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வந்தடைகின்றன. 

இந்திய விமானப் படையை வலிமைப்படுத்தும் விதமாக 2016ம் ஆண்டு 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மே மாதம் வர விருந்த 4 ரஃபேல் விமானங்களின் வருகை, கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதற்கிடையே சீனாவுடன் எல்லைப் பிரச்சனை மூண்டதால் ரபேல் போர் விமானங்களை விரைந்து வழங்குமாறு பிரான்சிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, முதல்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன. இதனை பிரான்ஸ் உடனான உறவில் புதிய மைல் கல் என்று வர்ணித்துள்ள பிரான்சிலுள்ள இந்திய தூதரகம், ரபேல் விமானம் ஒன்று புறப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது.

இந்திய விமானப்படை விமானிகளால் இயக்கப்பட்டு பிரான்சின் மெரிக்நாக் பகுதியில் இருந்து புறப்பட்ட ரஃபேல் விமானங்கள், 5,430 கிலோ மீட்டரைக் கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் Al Dhafra விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து, பாகிஸ்தான் வான் வழிப்பாதையை தவிர்த்து ரபேல் விமானங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரை அவை வந்தடைகின்றன. பின்னர், ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு நாளை வந்தடைகின்றன. 8 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் வான்வெளியில் பயணம் மேற்கொள்வதால், பறக்கும்போது ஆகாயத்திலேயே ஒருமுறை எரிபொருள் நிரப்பப்படுகிறது.

சுமார் 10 மணி நேரம் ஆகாயத்தில் பறக்க உள்ள விமானங்கள், நிமிடத்திற்கு 14 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கின்றன. திட்டமிட்டபடி இந்தியாவிடம் 10 ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 5 போர் விமானங்கள் பிரான்சிலேயே பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சனையில் சீனாவுடன் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், ரபேல் இணைவது இந்திய விமானப் படைக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரபேல் போர் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரான்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments