கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என பிரதமர் மோடி எச்சரிக்கை

0 6927
பல பகுதிகளில் வேகமாக பரவுவதால் விழிப்புணர்வோடு இருக்க அறிவுறுத்தல்

நல்லுறவைப் பேண இந்தியா முயன்றதை வாய்ப்பாகப் பயன்படுத்தி முதுகில் குத்தப் பாகிஸ்தான் முயன்றதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கார்கிலில் பாகிஸ்தான் படையினரின் ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் துணிச்சலுடன் முறியடித்ததை நினைவுகூர்ந்தார். ராணுவ வீரர்களின் துணிச்சல் வரும் தலைமுறையினருக்கு உந்துதலாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

நல்லுறவைப் பேண இந்தியா விரும்பியதைப் பயன்படுத்தி முதுகில் குத்தப் பாகிஸ்தான் முயன்றதாகத் தெரிவித்தார். உள்நாட்டுச் சிக்கல்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப இந்தியாவின் நிலத்தைக் கைப்பற்றும் தவறான முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகமுள்ளதையும், பிற நாடுகளை விட உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க முடிந்துள்ளபோதும், இன்னும் கொரோனா அபாயம் நீங்கவில்லை எனத் தெரிவித்தார். பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒரு காலத்தில் பெரிய நகரங்கள், புகழ்பெற்ற குடும்பங்கள், பெயர் பெற்ற பள்ளி கல்லூரிகளில் இருந்து வருபவர்களே கல்வி, விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாமக்கல்லில் லாரி ஓட்டுநரின் மகள் கனிகா சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் ஐந்நூற்றுக்கு 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளதைக் கூறிப் பாராட்டினார். 

நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நடராஜனின் மகள் கனிகா சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் ஐந்நூற்றுக்கு 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

இதை மனத்தின் குரல் வானொலி உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்விப் பயணத்தைத் தொடரும் மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கனிகாவின் சகோதரி ஷிவானி மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார்.

ஏழைக் குடும்பத்தில் இருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டுக்குத் தொண்டாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாணவி கனிகா, பிரதமரிடம் பேசியது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரது பேச்சு தமக்கு மேலும் ஊக்கமளிப்பதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் பாராட்டியதற்குக் கனிகாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments