கொரோனாவை கட்டுப்படுத்த கோதுமை மாவு வேலி..! பாபா பக்தாஸ் புது டெக்னிக்

0 26965
கொரோனா ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காக கோதுமை மாவை திரித்து ஊர் எல்லையில் தூவிய சாய்பாபா கோவில் நிர்வாகிகளின் வினோத செயல் திருச்சி அருகே அரங்கேறி உள்ளது.

கொரோனா ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காக கோதுமை மாவை திரித்து ஊர் எல்லையில் தூவிய சாய்பாபா கோவில் நிர்வாகிகளின் வினோத செயல் திருச்சி அருகே அரங்கேறி உள்ளது.

கொரோனா என்பது கண்ணுக்கு புலப்படாத கொடிய நோய் கிருமி, தொடுதலாலும், மூச்சுக்காற்றின் நீர்த்துவளைகள் மூலமும் பரவுகின்றது என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில்  சமயபுரம் அடுத்த கீழக்கல்லுக்குடியில் சாய்பாபா பெயரில் கோவில் நடத்திவரும் நிர்வாகிகள், தங்கள் ஊருக்குள் கொரோனா வராமல் இருக்க சாலையில் கோதுமை மாவால் பாதுகாப்பு கோடு போட்டுள்ளனர்.

110 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா வசித்த ஊருக்குள் காலரா பாதித்த போது , அவர் கோதுமையை திரித்து மாவாக்கி ஊர் எல்லையில் தூவியதால் காலரா நோய் சரியானதாக புத்தகம் ஒன்றில் அச்சிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இந்த பாபா கோவில் நிர்வாகிகளும் அதே பாணியில் கோதுமையை திரித்து மாவாக்கியுள்ளனர்.

திரிக்கப்பட்ட மாவை மொத்தமாக எடுத்துச்சென்று ஊர் எல்லையில், சாலையின் குறுக்கே போக்குவரத்து போலீசார் ஒயிட்லைன் போடுவது போல கோதுமை மாவை வைத்து கொரோனாவை தடுக்க வேலி அமைத்தனர்.

தமிழகத்தில் கிராமங்கள் வரை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, விழிப்புணர்வுடன் வீட்டில் தனித்திருப்பதும், தவிர்க்க இயலாமல் வீட்டில் இருந்து வெளியில் சென்றால் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம்.

அதைவிட தினமும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சத்தாண உணவு பொருட்களை உண்பதும் முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதே நேரத்தில் கொரோனாவை தடுப்பதாக கூறி கோதுமையை திரித்து மாவாக்கி அதனை வீணாக மண்ணில் கொட்டியதற்கு பதில் சத்தான கோதுமை மாவில் ருசியான சப்பாத்திகள் தயார் செய்து பாபா வழியில் ஏழை எளியமக்கள் சாப்பிட கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments