உதவிக்கு வராத உறவினர்கள்... இந்து முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமிய இளைஞர்

0 7128

கொரோனா அச்சம் காரணமாக,  ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்த இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்ய உறவினர்கள் முன்வராத  நிலையில், இஸ்லாமிய இளைஞர்கள் அந்த முதியவரின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் மூத்பிட்ரி பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். 62 வயதாகும் வேணுகோபால் உறவினர்களால் கைவிடப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாக அதே பகுதியில் உள்ள அனாதை இல்லத்தில் வசித்துவந்தார். இந்த நிலையில் தான், சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கடைசி காலம் என்பதை உணர்ந்துகொண்ட வேணுகோபால், இறுதியாக ஒரு முறை தன்  குடும்பத்தினரைச் சந்திக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அவரது குடும்பத்தினர் வேணுகோபாலை சந்திக்க விரும்பவில்லை. தன் கடைசி ஆசை நிறைவேறாமலேயே நேற்று முன்தினம் அனாதை இல்லத்திலேயே வேணுகோபால் மரணமடைந்தார். அவரது உடலை வாங்கி இறுதிச்சடங்கு செய்யக் கூட உறவினர்கள் யாரும் வரவில்லை.

image

இந்தத் தகவல் கிடைத்ததும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான முகம்மத் ஆசிப் என்பவர் காவல் நிலையத்துக்குச் சென்று இறந்துபோன முதியவரின் உடலை அடக்கம் செய்ய முறையான அனுமதி பெற்றார். முகம்மது ஆசிப்பும் அவரது நண்பர்களும் சேர்ந்து, இந்து முறைப்படி வேணுகோபாலுக்கு இறுதிச் சடங்கு செய்து கொல்லி வைத்தனர். முகம்மது ஆசிப் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

கொரோனா அச்சம் காரணமாக உறவினர்களே கைவிட்ட நிலையில், இந்து மதத்தைச் சேர்ந்த வேணுகோபால் உடலுக்குக் கொல்லிவைத்த முகம்மது ஆசிப்பின் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்... இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகிவருகிறது! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments