'எனக்கு நிதி வேண்டாம் ; வேலை வாங்கித்தாருங்கள்!' - கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்காக வேலை தேடும் துணை கமிஷனர்

0 5030

கொரோனா சென்னையில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.கே. நகரை சேர்ந்த ராதே அம்மா அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலைகளை பார்த்து வாழ்க்கையை ஓட்டி வந்தார். இவருக்கு ஆதரவாக யாரும் இல்லை . இந்த நிலையில், கொரோனா ராதே அம்மாவை தாக்கியது. ஆனாலும், கொரோனாவுடனான போரில் வெற்றி பெற்று ராதே அம்மா குணமடைந்து விட்டார். பிரச்னை அத்தோடு தீர்ந்து விடவில்லை. வேறுவிதத்தில் உருவெடுத்தது.

ராதே அம்மா குணமடைந்த பிறகு, அவரை மீண்டும் பணியில் அமர்த்த வீட்டு உரிமையாளர்கள் பயந்தனர். கொரோனாவில் இருந்து மீண்டாலும் அவரால் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியவில்லை. வேலை கிடைக்காத  நிலையில், ராதே அம்மா பசியால் வாடினார். ராதே அம்மாவின் நிலை குறித்து தியாகராய நகர் துணை கமிஷனர் ஹரிகிரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் ராதே அம்மாவுக்கு நிதியுதவி அளிக்க சென்ற போது, அவரோ அந்த பணத்தை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அதோடு, 'எனக்கு வீட்டு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தாலே போதுமானது' என்று போலீஸாரிடத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை தொடர்ந்து துணை கமிஷனர் ஹரிகிரன், கே.கே நகர் சென்று ராதே அம்மா பணி புரிந்த குடியிருப்புக்கு சென்று அங்கு குடியிருக்கும் மக்களை சந்தித்தார். அப்போது, ராதே அம்மாவை மீண்டும் பணியில் அமர்த்திக் கொள்ள குடியிருப்புவாசிகளிடத்தில் அவர் வேண்டுகோள் வைத்தார். ஆனால், அங்கு வசிப்பவர்களோ , தாங்கள் ஏற்கெனவே வேறு ஒருவரை வீட்டு வேலைக்காக நியமித்து விட்டதால், ராதே அம்மாவுக்கு பணி கொடுக்க இயலாது என்று கூறியதோடு , வேறு எங்காவது வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்றால் ராதே அம்மாவுக்கு சேர்த்து விடுவதாக போலீஸ் அதிகாரியிடத்தில் உறுதி கொடுத்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து மீண்ட பெண்ணுக்கு உதவியதற்காக தியாகராய நகர் துணை கமிஷனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments