'உலகின் முதல் விமானி ராவணன்' - புஷ்பகவிமானம் பற்றிய ஆய்வில் இறங்கும் இலங்கை

0 10285
ராவணன்

”உலகில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவன் எங்கள் பேரரசன் ராவணன் தான்” என்று கூறியுள்ள இலங்கை அரசு, இதை நிரூபிக்க மிகப்பெரிய ஆய்வில் களமிறங்கப் போவதாகவும் அறிவித்து உள்ளது.

ஏற்கெனவே, நேபாள அரசு இந்தியாவுக்கு எதிராக ராமர் பற்றிய விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. கோடிக்கணக்கான இந்துக்கள், ராமர் பிறந்தது அயோத்திதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், ‘ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி. இது இந்தியாவில் மட்டுமல்லாமல் நேபாளத்திலும் சர்ச்சைக்குள்ளானது. இப்போது நேபாள தொல்லியல் துறை, நேபாளத்தின் அயோத்தியாகக் கருதப்படும் பிர்குஞ்ச் அருகே உள்ள தோரியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

image

நேபாளம் ராமரைக் கையில் எடுத்ததைப் போன்றே, இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான இலங்கை இப்போது ராவணனைக் கையில் எடுத்துள்ளது.

வடமொழிப் புலவர் வால்மீகி இயற்றிய இதிகாசமான ராமாயணத்தின் முக்கியமான கதாபாத்திரம், ராவணன். இலங்கை மட்டுமல்லாமல் மூவுலகையும் அரசாண்ட பேரரசன் ஆவான். தன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் அறுத்ததற்குப் பழிவாங்குவதற்கு, புஷ்பக விமானத்தில் புறப்பட்ட ராவணன்  சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைத்துவிடுவான். இந்தியாவில் பலர் ராவணனை அசுரனாகக் கருதிவந்தாலும் அவன் பலராலும் நாயகனாக வணங்கப்படுகிறான். இந்தியாவுக்கு ராவணன் வில்லனாக இருந்தாலும் இலங்கை தங்கள் நாட்டின் ஹீரோவாக போற்றி வருகிறது. 

அதன் காரணமாக புஷ்பக விமானத்தை மேற்கோள்காட்டி, உலகிலேயே முதன்முதலில் விமானத்தை இயக்கியவன் எங்கள் பேரரசன் ராவணன் என்று கூறியுள்ளது இலங்கை அரசு. இதுகுறித்து இலங்கையின் விமானத் துறை  அமைச்சகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ராவணன்,  பயன்படுத்திய விமானங்கள் பற்றிய பழங்கால புத்தகங்கள், ஆவணங்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள் இருந்தார் அரசுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிக் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தவுள்ளது இலங்கை அரசு.

image

“இலங்கை அரசன் ராவணன் ஒரு புத்திசாலி.  அவர் ஒரு விமானி.  உலகிலேயே முதன்முதலில் விமானத்தை ஓட்டியவர் அவர்தான். இது புராணக்கதை மட்டுமல்ல. இதுதான் உண்மை. இது தொடர்பாக பலவாறு ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதை நிரூபிப்போம்” என்று கூறியுள்ளார் விமானப் போக்குவரத்து துறையின்  முன்னாள் துணைத்தலைவர் சஷி தானதுங்கே.

சிங்கள அரசு இலங்கையில் தமிழ் மொழி பேசும் இந்து சிறுபான்மை மக்களைக் கடுமையாகவே நசுக்கி வந்தாலும், சிவ பக்தனான ராவணனுக்கு மட்டும் புகழாரம் சூட்டி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானத்தை இயக்கிய பேரரசன்’ என்று புகழாரம் சூட்டியது இலங்கை. அது மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு இலங்கை அரசு ஏவிய முதல் செயற்கைக்கோளுக்கும் ’ராவணன் - 1’ என்று பெயரைச் சூட்டியது குறிப்பிடத்தக்கது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments