தங்க கடத்தல் வழக்கும் - வலையில் சிக்கும் பலரும்

0 3857
கேரள தங்க கடத்தல் வழக்கில் 3 ஆவது குற்றவாளி ஃபைசல் பரீது துபாயல் கைது

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி, யுஏஇ துணை தூதரகத்தின் பெயரில் வந்த டிப்ளமேட்டிக் லக்கேஜில் சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ 24 காரட் கடத்தல் தங்கம் பிடிபட்டது.

இது தொடர்பாக என்ஐஏ நடத்தும் விசாரணையில், சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் முதல், 2ஆம் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  3 ஆவது குற்றவாளியான ஃபைசல் பரீது மீது கொச்சி என்ஐஏ நீதிமன்றம் ஜாமின் இல்லா வாரண்ட் பிறப்பித்து, அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த வியாழன் அன்றே துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனையும் விசாரணை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறி உள்ளார். 

இதனிடையே முதல் குற்றவாளி சந்தீப் நாயரின் கடை துவக்கவிழாவில் கேரள சபாநாயகர் சிவராமகிருஷ்ணன் பங்கேற்றதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ஸ்வப்னா சுரேஷின் அழைப்பின் பேரில், திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தில் நடந்த கடை துவக்கவிழாவில் பங்கேற்றதாக சபாநாயகர் கூறி இருப்பது ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், திருவனந்தபுரம் யுஏஇ துணைதூதரக பொறுப்பு அதிகாரிஅவசரம் அவசரமாக அபுதாபி திரும்பிவிட்டார்.

இந்த நிலையில், அவரது பாதுகாவலராக இருந்த ஜெயகோஷ் என்பவர் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார். கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாக ஒதுக்குப்புறமான இடத்தில் கிடந்த அவர் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தங்க கடத்தல் குறித்த பல ரகசியங்கள் அவருக்கு தெரியும் என கூறப்படுகிறது. இன்று சுங்கத்துறை மற்றும் ஐபி((IB))அதிகாரிகள் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட அதே தினம் இவர், முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோருடன் அவர் பலமுறை செல்போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னரே ஸ்வப்னா சுரேஷும், சந்தீப் நாயரும் நிலம் வாங்கி போட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கடத்தல் பல ஆண்டுகளாக நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

போலி சான்றிதழ் தயாரித்து ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் மீது முன்னர் பதிவான வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். 

கடந்த ஆண்டு ஜூலை முதல் திருவனந்தபுரம் யுஏஇ துணை தூதரக ஊழியர்களின் உதவியுடன் குறைந்தது 230 கிலோ கடத்தல் தங்கம்  கொண்டு வரப்பட்டதாக  என்ஐஏ விசாரணை குறித்து தொடர்பில் இருக்கும் கேரள மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஒரு ஆண்டில் மட்டும் 13 முறை இது போன்ற டிப்ளமேட்டிக் லக்கேஜுகளில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்பட்டதாவும், அவை எந்த சோதனையும் இன்றி எளிதாக விமான நிலையத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாகவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஒருமுறை வந்த லக்கேஜ் சுமார் 70 கிலோ எடை வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments