ஊரடங்கு நீட்டிப்பு தகவல்., வதந்தி.! "எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது"

0 13498

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியாகும் தகவல் தவறானது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நிலவரம், தடுப்பு பணிகள் குறித்து விரிவான விவரங்களை எடுத்துரைத்தார். ஈரோடு மாவட்டத்தில் நீர் நிலைக் கரையோரங்களில் செயல்பட்டு வரும் மொத்தமுள்ள 147 தொழிற்சாலைகளில் 41 சாயத்தொழிற்சாலைகள் பூஜ்ய நிலையில் சாயக்கழிவு நீரை வெளீயேற்றி வருவதாகவும், நீர் நிலைகள் காரணமாக புற்றுநோய் பாதிப்புள்ளது என்பது நிருபணம் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீரை, நீர் நிலைகளில் கலந்து விடுவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கையை காளிங்கராயனில் கடந்த 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கீழ்பவானி பாசன கால்வாயில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். 81 கோடி ரூபாயில் பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது என்றும், ஈரோட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைய உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விளைச்சலை அதிகரிக்க 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும், ஈரோடு - சித்தோடு நான்கு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். ஊரடங்கு காலத்திற்கான மின்கட்டண வசூலில் எந்த குளறுபடியும் இல்லை என தெரிவித்த முதலமைச்சர், மின்கட்டண வசூலில் குளறுபடி இல்லை என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என்றார். நான்கு மாத காலத்திற்கு சேர்த்து மின் அளவீடு கணக்கிடப்பட்டாலும் இரண்டாக பிரித்தே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.


தமிழகத்தில் இனி வேறு எந்த மாவட்டத்தையும் பிரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று முதலமைச்சர் பதிலளித்தார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா நோய் குறித்தும், ஊரடங்கு குறித்தும் தவறான தகவல்களைத் தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments