'பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!' -கேரள உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பாதிரியார் மனு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் குட்டியூரில் புனித. செபஸ்தியார் கத்தோலிக்க ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் மாத்யூ . இந்த ஆலய வளாகத்துக்குள்ளே பள்ளிக் கூடம் உள்ளது. கடந்த 2016- ம் ஆண்டு இங்கு, பள்ளியில் படித்து வந்த மைனர் பெண்ணை பாதிரியார் ராபின் மாத்யூ தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு பெண்ணின் தாயும் தந்தையும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
பாதிரியரால் கர்ப்பமடைந்த இளம் பெண் தன் 17 - வது வயதில் 2017- ம் அண்டு பிப்ரவரி 17- ந் தேதி ஆண் குழந்தைக்கு தயானார். இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால், விஷயம் வெளியே தெரிந்து அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், இளம் பெண்ணின் பெற்றோரோ போலீசில் புகாரளிக்க மறுத்தனர். இதனால், குழந்தைகள் நல அமைப்பு சார்பில் போலீஸில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 27- ந் தேதி பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த பாதிரியார் ராபின் மாத்யூ வெளிநாட்டுக்கு தப்ப முயன்றார். ஆனால், கொச்சி விமான நிலையத்தில் போலீஸார் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். பாதிரியார் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், ஆலயத்தில் பணி புரிந்த மற்றோரு பாதிரியார், 4 கன்னியாஸ்திரிகள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். தலசேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது ,இளம் பெண்ணின் தாயார் பிறழ் சாட்சியளித்தார். முதலில் பாதிரியாருக்கு ஆதரவாக இருந்த பெண்ணின் தந்தை பிறகு, ராபின் மாத்யூவுக்கு எதிராக சாட்சி கூறினார். அதோடு, டி.என்.ஏ பரிசோதனையிலும் இளம் பெண்ணின் குழந்தைக்கு பாதிரியார்தான் தந்தை என்பது உறுதியானது. கிடைத்த சாட்சிகளின் அடிப்படையில் 2019- ம் ஆண்டு பிப்ரவரி 16- ந் தேதி பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாலியல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால், ராபின் மாத்யூவை பாதிரியாராக பணியாற்ற கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்ஸிஸ் தடை விதித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தரவிட்டார். இந்த நிலையில், சிறையில் அடைப்ட்டு ராபின் மாத்யூ கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ''பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறேன். குடும்பத் தலைவனாக இருக்கவும் ஆசைப்படுகிறேன். இதற்காக 2 மாதங்கள் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். '' என்று தெரிவித்துள்ளார். அரசு தரப்பு ராபின் மாத்யூவின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது. இந்த வழக்கு ஜூலை 24- ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதிரியார் ஒருவர் குடும்பத் தலைவனான மாற விரும்பி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments