ஒரு வயது குழந்தையை தவிக்க விட்ட ஐ.டி ஊழியர் மனைவியின் விபரீத முடிவு..! மாமியார் வரதட்சனை கொடுமை

0 16774

சென்னையில் இருந்து கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற ஐ.டி ஊழியரின் செல்போனுக்கு முன்னாள் காதலி அழைத்து காதல் ரகசியங்களை அம்பலப்படுத்தியதால், அவரது மனைவி வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது. வீட்டை பூட்டி மருமகளை அடிக்க சொன்ன மாமியார் கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கும், 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த விஜயகுமாருக்கு திருமணத்தின்போது 50 சவரன் நகைகளும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும், வீட்டுக்கு தேவையான அனைத்துத் பொருட்களும், வரதட்சணையாக பெண் வீட்டார் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் மாமியார், ஷோபனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ஆபாச வார்த்தைகளால் வசைபாடி வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை ஐடி கம்பெனியில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்த விஜயகுமார், கொரோனா ஊரடங்கால், பணிஇழந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

வீட்டிலிருந்த விஜயகுமாரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்துள்ளார். சோபனா செல்போனை எடுத்து பேசிய போது விஜயகுமாரின் காதலி என்று பேசத்தொடங்கிய அந்த பெண் , 41 நிமிட உரையாடலில் விஜயகுமாரின் மொத்த காதல் விளையாட்டுகளையும் அப்படியே போட்டுக் கொடுத்து விட்டதால், அதனை அப்பாவியாகக் கேட்ட ஷோபனா கடும் மனக்குழப்பத்துக்கு ஆளாகியுள்ளார்.

தூக்கத்தில் இருந்து விழித்ததும் தனது காதல் ரகசியம் அம்பலமானது அறிந்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், அதனை மறைக்க கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. கணவனின் செயலால் கடும் வேதனையடைந்த ஷோபனா விபரீத முடிவு ஒன்றை கையில் எடுத்தார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர், தன்னுடைய செல்போனில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். ஒன்றில் தன் கணவரின் பெண் தொடர்பு மற்றும், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில், தன்னை கணவர் அடிக்கும் போது , வீட்டுக்குள் சென்று அறையை பூட்டி அடிக்கச்சொல்லி மாமியார் தூண்டியதாக வேதனை தெரிவித்த ஷோபனா, தனது ஒரு வயதுக் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தாயிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த இரு வீடியோக்களையும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் ஷோபனா. இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் காவல்துறையினர் இரு வீடியோக்களையும், முன்னாள் காதலி பேசிய ஆடியோவையும் கொண்டு விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

குடும்ப வன்முறைக்குள்ளாகும் பெண்கள், தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம்.

மனைவியிடம் பேசுவதை தவிர்த்து பிற பெண்களிடம் நீண்ட நேரம் காதல் மொழி பேசுவதை வழக்கமாக கொண்ட ஆண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம். அதே நேரத்தில் தன் வீட்டிற்கு வரும் மருமகள் தன்னுடைய இன்னொரு மகள் என்ற உணர்வில்லாமல், வரதட்சணைக்காக ஆபாச வார்த்தைகளால் வசைபாடும் மாமியார்கள் சமூகத்தின் சாபக்கேடு என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments