ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் - ரிலையன்ஸ் AGM - 2020 அப்டேட்!

0 2955

பிரபல தேடுபொறி இயந்திரமான கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7.7 % பங்குகளைக் கைப்பற்றி 33,733 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43 - வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM - 2020) நடைபெற்றுவருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூகுள் நிறுவனத்தின் முதலீடு குறித்து தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதன் முக்கிய சாரம்சம்...

* கோவிட் 19 ஊரடங்கு காலத்தில் உலகில் அதிக அளவில் வளர்ந்த ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே.

* 150 பில்லியன் டாலர் மதிப்புடைய ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் மட்டுமே.

* இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் தான் அதிகளவில் ஜிஎஸ்டி மற்றும் வாட் வரி செலுத்துகிறது. வருடத்துக்கு ரூ.69,000 கோடி அளவுக்கு வரி கட்டுகிறது.

* ஜியோ மார்ட் நிறுவனம் ஒரு நாளைக்கு 2,50,000 க்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்று வருகிறது

* ஜியோ மார்ட் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ், ஃபார்மா, பேஷன், சுகாதாரம் ஆகிய துறைகளிலும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

* இந்தியாவிலேயே சில்லறை வணிகத்தில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே.

* கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் எட்டு மடங்கு வளர்ந்துள்ளது. 11 மடங்கு லாபம் ஈட்டியுள்ளது.

* ஜியோ 5ஜி தொழில் நுட்பத்திலும் அடியெடுத்து வைக்கப்போகிறது.

* இந்திய நிறுவனம் உலக அளவில் டிஜிட்டல் துறையில் கோலோச்சும் காலம் வந்துவிட்டது...

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்து வருகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும்  ஃபேஸ் புக், குவால்காம், இன்டெல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பல ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்தன. அவற்றின் மூலம் ரூ.1.52 லட்சம் கோடி அளவுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கூகுள் நிறுவனம் தேடுபொறி, வரைபடம், மின்னஞ்சல் ஆகிய சேவைகளில் முன்னணியில் உள்ளது. கூகுள், ஜியோவுடன் எந்தத் துறையில் இணைந்து பணியாற்றப்போகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கெனவே, உலக பணக்காரர்கள் வரிசையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், கூகுள் நிறுவனர் செர்கி பிரின், லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7,240 கோடி டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

எரி சக்தி துறையில் கவனம் செலுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் துறையை நோக்கி நகர்ந்து வருகிறது. அத்துடன் சில்லறை வணிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்து வருகின்றன!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments