ராணுவ வீரர் வீட்டில் இரட்டைக்கொலை..!

0 11696

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீடு புகுந்து ராணுவ வீரரின் தாயார், மனைவியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 65 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்குரணி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன். இவரது தாய், தந்தை, மனைவி, குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்றிரவு ஸ்டீபனின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரருமான சந்தியாகு தண்ணீர் பாய்ச்சுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில், சந்தியாகுவின் மனைவி ராஜகுமாரி வீட்டிற்கு வெளியிலும், ஸ்டீபனின் மனைவி சினேகாவும், அவர்களது 7 மாத குழந்தையும் வீட்டிற்குள்ளும் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, வந்த மர்ம நபர்கள் சிலர், முதலில், வெளியே படுத்திடுந்த ராஜகுமாரியை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர், ராஜகுமாரியை இரும்பு ராடை கொண்டு மர்ம நபர்கள் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

அதையடுத்து வீட்டிற்குள் படுத்திருந்த சினேகாவையும் குழந்தையின் கண் முன்னே இரும்பு ராடை கொண்டு அவர்கள் தாக்கியுள்ளனர். இதில், ராஜகுமாரியும், சினேகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே காலை நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், இரண்டு பேரும் இறந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதாபுரம் எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 65 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments