'மொத்தமாக நிராகரிக்கிறோம்’ - தென்சீனக் கடலில் சீனாவுக்கு ‘செக் மேட்’ வைத்த அமெரிக்கா...

0 16145
அமெரிக்க போர்க்கப்பலான USS ரொனால்ட் ரீகன்

"தென்சீனக் கடலில் உரிமை கோரும் சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு முரணானது. தென்சீனக் கடல் மீதான சீனாவின் அனைத்துவிதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம்" என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது அமெரிக்கா. வாஷிங்டன் - பெய்ஜிங் இடையேயான இந்த மோதல் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்சீனக் கடல் எல்லைப் பிரச்சனையில் முதல்முறையாக அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள். தென்சீனக் கடல் விவகாரத்தில் இது சீனாவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது.

image

தென்சீனக் கடல்


சர்வதேச வணிகத்தில் முக்கிய வர்த்தக வழித்தடமாக இருக்கிறது தென் சீனக் கடல். உலகின் கடல் வழி போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி தென்சீனக் கடல் வழியாகவே நடைபெறுகிறது. மேலும் எண்ணெய், மீன் வளம் உள்ளிட்ட கடல் வளமும் தென் சீனக் கடலில் அதிகம் இருக்கிறது. அதனால், தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை சீனா, தைவான், வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய ஆறு நாடுகளும் உரிமைகோரி வருகின்றன.

மற்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளையும், கடல் பகுதிகளையும் சீனா உரிமை கோரி வருகிறது. சர்வதேச விதிகளுக்கும் முரணாக சில தீவுகளைச் சீனா ஆக்கிரமித்து, ராணுவ பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகிறது. தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி ராணுவ வழித்தடமாகவும் மாற்றி வருகிறது. மேலும், கடந்த மாதத்தில் யாங்சிங் எனும் தீவை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து அதில் குண்டு வீசும் விமானங்களை நிறுத்திவைத்து, தெற்காசிய நாடுகளை மிரட்டியது சீனா. அந்தத் தீவுக்கு ஏற்கெனவே வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

தென் சீனக் கடலில் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தன் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது. இதற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. பதிலுக்குச் சீனாவும் தனது போர்க் கப்பல்களைத் தென் சீனக் கடலில் நிறுத்தியது. இதனால் தென் சீனக் கடலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

image
சீனா செயற்கையாக உருவாக்கியிருக்கும் தீவு

இந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டேட் ஆப் செக்ரட்டரி மைக் பாம்பியோ, "தென்சீனக் கடலில் பெய்ஜிங் அதிகாரம் செலுத்தி பேரரசாக இருக்க நினைப்பதை உலகம் ஒரு நாளும் அனுமதிக்காது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கிழக்கு ஆசிய  நாடுகளுக்கு உறுதுணையாக நிற்போம்.  சர்வதேச சட்டத்தின்படி அவர்களின் உரிமை, இறையாண்மை மற்றும் கடல் வளங்கள் ஆகியவற்றைக் காப்போம். தென்சீனக் கடலில் உரிமை கோரும் சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு முரணானது. தென்சீனக் கடல் மீதான சீனாவின் அனைத்துவிதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரவேற்றுள்ளன. ஏற்கெனவே கொரோனா விவகாரம், உய்குர் மக்கள் அடக்குமுறை என்று பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இது இரு  நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றத்தை அதிகமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments