தடுப்பூசி ஆய்வுகள்.. எதிர்கொள்ளும் புதிய சவால்?

0 10507

கொரோனோ நோயாளிகளின் உடலில் உருவாகும் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் விரைவாக மறைந்துவிடுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கொரோனா வைரசுக்கு எதிராக, மனித உடலில் நிரந்தர எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா என்பது குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவில், அறிகுறிகள் வெளிப்படாத 37 பேர் மற்றும் அறிகுறிகள் வெளிப்பட்ட 37 பேர் என கொரோனா நோயாளிகளின் இரு குழுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கொரோனா பாதித்தவர்களுக்கு உடலில் உருவாகும் இம்முனோகுளோபுலின் ஜி (immunoglobulin G - IgG) என்ற நோய்எதிர்ப்பு புரதங்களின் அளவு 2 முதல் 3 மாதங்களில் வெகுவாகக் குறைந்து விடுவதை, இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

அறிகுறிகள் வெளிப்பட்ட மற்றும் அறிகுறிகள் வெளிப்படாத இரு குழுக்களிலும், 90 சதவீதம் பேருக்கு இதேநிலை கண்டறியப்பட்டதாக, நேச்சர் மெடிசின் என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், தனிமை நிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 வாரங்கள் கழித்து பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அறிகுறிகள் வெளிப்படாத நோயாளிகளில் 40 சதவீதம் பேருக்கு, உடலில் கொரோனா ஆன்டிபாடிகளே இல்லை என்பதும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஸ்பெயினில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், கொரோனா நோயாளிகளின் உடலில் இருந்து ஆன்டிபாடிகள் சில வாரங்களில் மறைந்துவிடுவது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 14 சதவீதம் பேருக்கு சில வாரங்கள் கழித்து, உடலில் ஆன்டிபாடிகள் ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டதாக, லான்சட் என்ற மருத்துவ அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக, herd immunity எனப்படும் சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி உருவாவது சாத்தியமா என்பது குறித்த கேள்விகளை, இந்த ஆய்வு முடிவு எழுப்புவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

வைரசுக்கு எதிராக மனித உடலில் நிரந்தர எதிர்ப்பு சக்தியை உருவாக்கவே தடுப்பூசிகள் கண்டறியப்படுகின்றன. ஆனால் கொரோனாவை முறியடிக்க, உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு புரதங்கள் விரைந்து மறைந்துவிடுகின்றன என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி மருந்து கண்டறியும் ஆய்வுகள் இதுபோல பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments