ராஜஸ்தானில் தொடங்கியது 'ரிசார்ட்' அரசியல்!

0 2265

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 107 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள ஆளும் காங்கிரஸ் கட்சி, அவர்களை ஜெய்ப்பூர் அருகில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது. 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு இன்னும் கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பலத்திற்கு 101 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 10 சுயேச்சைகள், சிறிய கட்சிகளை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 122 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு உள்ளது. 72 எம்எல்ஏக்களை பெற்றுள்ள பாஜகவுக்கு, 3 எம்எல்ஏக்களை கொண்ட ஆர்எல்பி என்ற மற்றொரு சிறிய கட்சியின் ஆதரவு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீறுபூத்த நெருப்பாக இருந்த அதிகார மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

மாநில அரசை சீர்குலைக்க முயன்ற புகார் தொடர்பான விசாரணையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள சச்சின் பைலட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பாஜக உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், தனக்கும் கூட சம்மன் அனுப்பப்பட்டதாக முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியபோதும், சச்சின் பைலட் தரப்பை அமைதிப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி, சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அசோக் கெலாட் தலைமையிலான அரசு, தற்போது சிறுபான்மை அரசாகி விட்டதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதில் முக்கிய கருவியாக செயல்பட்டு, பின்னர் பாஜகவில் சேர்ந்த இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா போலவே, சச்சின் பைலட்டும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையப் போவதாகக் கூறப்பட்டது. இதற்கேற்ப சச்சின் பைலட்டும் ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். ஆனால் தாம் பாஜகவில் சேரப்போவதில்லை என சச்சின் பைலட் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக 109 எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதத்தை பெற்றுள்ளதாக, ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே இன்று அதிகாலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில், முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 97 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாகவும், இதன் மூலம் சச்சின் பைலட்டுக்கு 10 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருப்பது தெளிவாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கூட்டத்தில் 107 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டதாக அசோக் கெலாட் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பேருந்துகள் மூலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் அல்லது சதியில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயகத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாகவும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமை மீதும், அசோக் கெலாட் மீதும் நம்பிக்கை வைத்து ஒருமனதாக ஆதரிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments