ஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

0 5390

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவை 14 நாட்கள் காவலில் வைக்கக் கொச்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்ததை விமான நிலையச் சுங்கத் துறையினர் கண்டுபிடித்தனர். தங்கக் கடத்தலில் கிடைத்த பணத்தைத் தீவிரவாதச் செயலுக்குப் பயன்படுத்தியதாகத் தெரியவந்தது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித், முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், பாசில் பரீத், சந்தீப் நாயர் ஆகியோர் மீது தேசியப் புலனாய்வு முகமையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சரிதை முதலில் கைது செய்தனர். இந்நிலையில் பெங்களூருக்குத் தப்பிச் சென்ற ஸ்வப்னாவையும், சந்தீப்பையும் தேசியப் புலனாய்வு முகமையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

அங்கிருந்து காரில் கேரளத்தின் கொச்சிக்கு அழைத்து வந்தனர். ஆலுவா மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் பிற்பகல் இரண்டரை மணிக்குக் கொச்சியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை அலுவலகத்துக்குக் கொண்டு வந்து விசாரித்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவினரும் அலுவலகத்தின் வெளியே முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பாதுகாப்புக்கு நின்ற கேரளக் காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர்.

தேசியப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்குப் பின் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். ஸ்வப்னா, சந்தீப் இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments