துப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..!

0 10675

திருப்போரூர் அருகே கோவில் நில ஆக்கிரமிப்புத் தொடர்பான மோதலின் போது, தனது தந்தையை அரிவாளால் வெட்டியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்ற விவகாரத்தில், திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை, தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் அதிமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தியின் சகோதரரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான குமார், தனது நிலத்துக்கு பாதை அமைக்க கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூலிப்படையினரை அழைத்து வந்து பாதை அமைக்க முயன்ற குமாரை, திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கூலிப்படையினர் தாக்கியதில் எம்.எல்.ஏவின் தந்தை உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆவேசமாக வந்த எம்.எல்.ஏ இதயவர்மன், தான் கொண்டு வந்த சிங்கிள் பேரல் துப்பாக்கி மற்றும் 9 எம்.எம்.துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் கூலிப்படையினர் தப்பி ஓடினர். அவ்வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் என்பவர் மீது துப்பாக்கி குண்டு உரசி சென்றதில் காயமடைந்தார்.

மேலும் கூலிப்படையினர் விட்டு சென்ற இருசக்கர வாகனங்களை எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். தகவலறிந்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து குமார், எம்.எல்.ஏவின் தந்தை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஆகியோர் தரப்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் மீது ஆயுத தடைச் சட்டம், கொலை முயற்சி, குழு மோதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட இரு துப்பாக்கிகளும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானது விசாரணையில் தெரியவந்ததால், எம்.எல்.ஏ கைது செய்யப்படுவார் என்றும் கூறியிருந்தார்.

இதனையறிந்த எம்.எல்.ஏ இதயவர்மன் திருப்போரூரில் இருந்து, கட்சி நிர்வாகி சுரேஷ் என்பவரது காரில் சென்னைக்கு தப்பியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மேடவாக்கம் அருகே அந்த கார் ஓட்டுநருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து சென்னை போலீசாருடன் இணைந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனும், பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு விரைந்து கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினார்.

அதில் மேடவாக்கம் கஸ்தூரிபாய் நகரில் உள்ள உறவினர் முத்து என்பவரது வீட்டில் எம்.எல்.ஏ தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் எம்.எல்.ஏ இதயவர்மனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதே போல், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க முயன்ற, எதிர்தரப்பை சேர்ந்த, அதிமுக பிரமுகரின் சகோதரர் குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து செங்கல்பட்டு அழைத்து செல்லப்பட்ட எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தனியார் மண்டபத்தில் வைத்து, திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் ஏடி.எஸ்.பிக்கள், டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் எம்.எல்.ஏ இதயவர்மனிடன் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மண்டபத்துக்கு வெளியே திரண்ட எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை போலீசார் களைய செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments