தந்தையை தாக்கியவர்களுக்கு பதிலடி ... துப்பாக்கியால் சுட்ட திமுக MLA..! ரியல் எஸ்டேட் மோதலால் பதற்றம்

0 19229

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து தனியார் நிலத்துக்கு சாலை அமைக்க முயன்றதை தடுத்த திமுக எம்.எல்.ஏ வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தந்தையை வெட்டியவர்களை எம்.எல்.ஏ துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் சாலையில் சென்ற ஒருவர் காயம் அடைந்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் அதிமுக பிரமுகர் தாண்டவ மூர்த்தியின் சகோதரர் குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செங்காடு பகுதியில் 350 ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கி, மொத்தமாக சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்றதாக கூறப்படுகின்றது.

இந்த 350 ஏக்கர் நிலத்துக்கும் செல்ல உரிய வழி இல்லாத காரணத்தால் குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறப்படுகின்றது. மொத்த நிலத்திற்கும் வாங்கி அதற்கு வேலி போட்டதும் அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வழி ஏற்படுத்த முயன்றுள்ளார் குமார்.

அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு வழி அமைக்க முடியாதபடி வாய்க்கால் தோண்டி போட்டுள்ளனர். இதனால் குமார் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் குமார், சனிக்கிழமை கண்ணகி நகர் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை அரிவாள் கத்தியுடன் செங்காடு பகுதிக்கு இரு சக்கரவாகனங்களில் வரவழைத்ததாக கூறப்படுகின்றது. அவர்களை துணைக்கு வைத்துக் கொண்டு குமார் ஜேசிபி மூலம் கோவில் நிலத்தை சமன்படுத்தி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

ஆயுதங்களுடன் நின்ற கூலிப்படையினரை கண்டு அஞ்சி ஊர் மக்கள் ஒதுங்கி நின்ற நிலையில் அந்த தொகுதி ரியல் எஸ்டேட் அதிபரான குமாரின் உறவினரும், திருபோரூர் எம்.எல்.ஏ செந்திலின் தந்தையுமான லட்சுமிபதி என்பவர் தைரியமாக சென்று தட்டிக்கேட்டுள்ளார். அவருடன் ஊர்மக்களும் சென்று சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கூலிப்படையை சேர்ந்த ரவுடிகள், எம்.எல்.ஏவின் தந்தை லட்சுமிபதி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டியதால் கூட்டம் கலைந்து ஓடியுள்ளது.

தந்தை வெட்டப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆவேசமாக வந்த எம்.எல்.ஏ செந்தில் தான் கையோடு எடுத்து வந்திருந்த சிங்கிள் பேரல் துப்பாக்கியால் ரவுடிகளை சரமாரியாக சுட அவர்கள் தாங்கள் வந்த இரு சக்கர வகனங்களை போட்டு விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

சிலர் காரில் ஏறி தப்ப முயல தன் இடுப்பில் சொறுகி வைத்திருந்த 9 எம் எம் துப்பாக்கியால் சுட்டதில் காரின் முன்பக்க பேணட், மற்றும் வலதுபக்க ஜன்னல் கண்ணாடியை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் கூலிப்படை கும்பல் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அந்தபகுதியே போர்க்களம் போல மாறியது.

எம்.எல்.ஏ சரமாரியாக சுட்டதில் சாலையில் சென்ற ஒருவரின் உடலை துப்பாக்கி குண்டு உரசி சென்றுள்ளது. இதில் காயம் அடைந்தவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ வின் தந்தை உள்பட 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். எம்.எல்.ஏ செந்திலும் , அவரது தந்தை லட்சுமிபதியும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி முறைப்படி அனுமதிப்பெற்று இரு துப்பக்கிகள் வாங்கி வைத்துள்ளனர்.

ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள துப்பாக்கியால் சுட்டதாக செந்தில் காவல்துறையினரிடம் விளக்கம் அளித்தார். இருந்தாலும் தோட்டாக்களை எண்ணி வாங்கிக் கொண்ட காவல்துறையினர் அந்த இரு துப்பக்கிகளையும் பறிமுதல் செய்தனர். அங்கு பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் புகார்கள் பெற்று வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ வைத்திருந்த இரு துப்பக்கிகளும் முறையாக அனுமதி பெற்ற துப்பாக்கி என்பதால் அவரை கைது செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. 

அதே நேரத்தில் 5 ரவுடிகள் ஒரு இடத்தில் கூடும் வரை அங்கு காவல்துறையினர் ஒருவர் கூட இல்லாதது ஏன் ? என்ற கேள்வி எழுப்பியுள்ள அந்த கிராமத்து மக்கள் கூலிப்படை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments