சாத்தான்குளம் வழக்கு-சிபிஐ அதிகாரிகள் குழு நாளை வருகிறது

0 4189

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உடனடியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கு குறித்து விசாரிக்க 7 அதிகாரிகள் நாளை தமிழகம் வர இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து பலகட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில், இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், தலைமை காவலர் ரேவதி உட்பட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக மனுவும் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும், தற்போது வரை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க படவில்லை எனவும் கூறப்பட்டது. .

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," ஜூலை 7ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் நகல் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப்பிரிவின் 7 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் தமிழகம் வந்து விசாரணையை தொடங்க உள்ளதாகவும், விசாரணைக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிபிஐயோ, சிபிசிஐடியோ கைது செய்யப்பட்டவர்களை கைது செய்த முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வழக்கு குறித்து சிபிசிஐடி தரப்பில் முழுமையான விசாரணை அறிக்கைகளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அச்சு, காட்சி ஊடகம், சமூக வலைதளங்களில் வழக்கு விசாரணைக்கு இடையூறாக செய்தி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments