மத்திய குழுவினர்.. சென்னையில் ஆய்வு..!

0 1261

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்த மத்திய குழுவினர், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் நிலவிவரும் கொரோனா பாதிப்பு குறித்தும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் புதன்கிழமை தமிழகம் வந்தனர்.

இந்நிலையில் இன்று ஆய்வை தொடங்குவதற்கு முன்பாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 

அதன் பின்னர் புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்திலும், புளியந்தோப்பு காய்ச்சல் முகாமிலும் ஆய்வு செய்தனர். ஐ.சி.எம்.ஆர். வழிமுறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதா  என்றும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சூளையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

இதையடுத்து கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர், பரிசோதனை முறைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதன் தொடர்ச்சியாக அதிநவீன வசதிகளுடன் கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரசு கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தீவிர சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர், ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஏற்கனவே இரு முறை ஆய்வு நடத்தியுள்ள மத்திய குழுவினர், தற்போது 3வது முறையாக ஆய்வு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments