குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி கடல் உணவு  உற்பத்தியில் முதல் இடம் பிடித்தது தமிழ்நாடு!

0 3806

ந்தியாவின் கடல் உணவு உற்பத்தியானது 2018 - ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 - ம் ஆண்டில் 2.1 %  உயர்ந்து புதிய இலக்கை எட்டியுள்ளது. இதில்,  மீன் உற்பத்தியில் குஜராத்தைப் பின்னுக்குத்தள்ளி தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்று  மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) தெரிவித்து உள்ளது.

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், '' 2019 - ம் ஆண்டில் 3.56 மில்லியன் டன் அளவுக்கு கடல் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு 7.75 லட்சம் டன், குஜராத் 7.49 லட்சம் டன், கேரளா 5.44 லட்சம் டன் அளவுக்கு கடல் உணவ உற்பத்தி செய்துள்ளன. இந்தியாவில் அதிகளவு கடல் உணவு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி,'' வணிக ரீதியில் முக்கியத்துவம் பெறாத சிவப்புப் பல் கிளாத்தி மீன் 2.74 லட்சம் டன் அளவுக்குப் பிடிபட்டுள்ளன. இந்த மீன் உள்நாட்டுச் சந்தையில் மட்டுமே அதிகளவில் விற்கப்படுகிறது. இந்த  ரக மீன்கள்  விலங்குகளுக்கே உணவாக அளிக்கப்படுகிறது. 2018 - ம் ஆண்டில் அதிகளவில் பிடிபட்ட கானாங்கெளுத்தி, 2019 - ம் ஆண்டில் 43 சதவீதம் குறைந்து விட்டது. வாலை மீன் 2.19 லட்சம் டன்னும் பெனாயிடு இறால் 1.95 லட்சம் டன்னும் பெனாயிடு அல்லாத இறால் 1.80 லட்சம் டன்னும்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

2018 - ம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் 2019 - ம் ஆண்டில் கேரளாவில் 15.4 % அளவுக்கு மீன் உற்பத்தி சரிந்துள்ளது. மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன் உற்பத்தியும் வெகுவாக குறைந்திருப்பதை CMFRI அறிக்கை மூலம் அறிய முடிகிறது. எண்ணெய் மத்தி 44,320 டன் மட்டுமே பிடிபட்டுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாகும்.  கானாங்கெளுத்தி 40554 டன் மட்டுமே பிடிபட்டுள்ளது. இது கடந்த அளவுடன் ஒப்பிடுகையில் 50 % குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் பிடிபட்ட கடல் மீன்களின் மதிப்பு உயர்ந்து 2019 -  ம் ஆண்டில் ரூ. 60,881 கோடிக்கு வணிகம் செய்யப்பட்டுள்ளது. இது 2018 ம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் 15.6 % அதிகம்'' என்று சொல்லப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments