கேரளத்தை உலுக்கும் கடத்தல் தங்கம்..!

0 7811

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்ட சம்பவம், கேரள அரசியலை உலுக்கி வருகிறது. இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேசை காப்பாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவசங்கர் ஓராண்டு விடுமுறையில் சென்றார்.  

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக பார்சல் சோதிக்கப்பட்டதில், பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த சம்பவத்தில் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக முன்னாள் ஊழியர் சரித் கைது செய்யப்பட்டார். அவருக்கு போலி ஆவணம் தயாரித்து உதவியதாக, அரசு தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் வரும் ஸ்பேஸ் பார்க் நிறுவன செயல் மேலாளர் ஸ்வப்னா சுரேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகி விட்டார். அவருக்கு அப்பதவி கிடைக்க உதவியதாகவும், வழக்கு விசாரணையை நிறுத்தும்படி கூறியதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், தகவல் தொழில்நுட்ப செயலாளருமான சிவசங்கர் குற்றச்சாட்டுக்கு ஆளானார். மேலும் இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதிய நிலையில், எத்தகைய விசாரணையையும் வரவேற்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் சுங்க சட்டத்தை மீறும் வகையிலான குற்றம் இதுஎன்பதால் வருமான புலனாய்வு இயக்குநரகமும், சுங்கத்துறையுமே விசாரிக்க முடியுமென சுங்கத்துறை ஆணையர் சுமித் குமார் கூறியுள்ளார். இருப்பினும், முதலமைச்சர் அலுவலகத்துக்கு நேரடியாக தொடர்பு இருப்பது உறுதியாகாத வரை, அதுகுறித்து சுங்க ஆணையரகம் விசாரிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் வருமான புலனாய்வு இயக்குநரகமும் உன்னிப்பாக கவனிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments